தமிழ்நாடு

திருமூர்த்தி அணை நீர் மட்டம் தொடர் சரிவால் பாசனத்துக்கு சிக்கல்; முதலாம் மண்டல பாசன விவசாயிகள் அதிர்ச்சி

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020
Advertisement
திருமூர்த்தி அணை நீர் மட்டம் தொடர் சரிவால் பாசனத்துக்கு சிக்கல்; முதலாம் மண்டல பாசன விவசாயிகள் அதிர்ச்சி

உடுமலை: பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும் நிலையில், திருமூர்த்தி அணை நீர் மட்டம் சரிந்து, வரத்தும் குறைந்துள்ளதால், பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், திருப்பூர், கோவை மாவட்டங்களில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலமாக பிரித்து, தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. முதலாம் மண்டலத்தில், 94,521 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த, ஜன.,27 முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.பி.ஏ.பி.,திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு வழங்கப்படுகிறது.

தொகுப்பு அணைகளிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு வழக்கமாக, வினாடிக்கு, 900 கன அடி நீர் வரத்து காணப்படும். இதனால், அணைக்கு நீர் வரத்தும், அணையிலிருந்து நீர் திறப்பும் நிலையாக இருக்கும். 21 நாட்கள் நீர் திறப்பு; ஏழு நாள் இடைவெளியில், மீண்டும் அணை நீர் மட்டம் உயர சரியாக இருக்கும்.

ஆனால், முதலாம் மண்டல பாசனம் துவங்கியது முதல், காண்டூர் கால்வாய் மூலம், வினாடிக்கு, 500 முதல் 600 கன அடி நீர் மட்டுமே வரத்து உள்ளது. அணையிலிருந்து, பி.ஏ.பி., பாசன நிலங்கள், ஏழு குளம் பாசனம் தளி கால்வாய், உயர்மட்ட கால்வாயில் நீர் திறக்கப்படுகிறது. இதனால், திருமூர்த்தி அணை நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

அணை நீர் மட்டம் :திருமூர்த்தி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 36.78 அடியாகவும், நீர் இருப்பு, 1,048 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.அணைக்கு வினாடிக்கு, காண்டூர் கால்வாய் வழியாக, 437 கன அடி நீரும், பாலாற்றின் மூலம், ஆறு கன அடி நீர் என வரத்து, 443 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து பாசனத்திற்கு, 1,165 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.

முதலாம் மண்டல பாசனத்திற்கு, சுற்றுக்கு, 1,900 மில்லியன் கன அடி நீர், 21 நாட்கள் வழங்கப் படும். முதல் சுற்றுக்கு, கடந்த 27 ல் திறக்கப்பட்டு, வரும், 17 ல் நிறைவு பெறும் வாய்ப்புள்ளது. ஏழு நாள் இடைவெளியில் இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், வரத்து குறைவு, அணை நீர்மட்டம் சரிவு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கூறியதாவது:முதலாம் மண்டல பாசனத்திற்கு, முழுமையாக தண்ணீர் கிடைப்பதில்லை. கடந்த நான்கு மாதமாக மழை இல்லாமல், கடும் வறட்சி நிலவுகிறது. கோடை காலத்தில், பாசனம் துவங்கியுள்ளதால், நீர் ஆவியாதல், தண்ணீர் திருட்டு என, பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. பிரதான கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய்களில், நேரடியாக குழாய் அமைத்தும், கால்வாய் கரைகளை துளையிட்டும், தண்ணீர் திருடப்படுகிறது.

அதிலும், இரவு நேரங்களில் அதிகம் நீர் திருடப்படுவதால், பாசன நிலங்களுக்கு முறையாக தண்ணீர் கிடைக்காமல், பயிர்கள் காய்ந்து வருகின்றன. இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.


ஏழுநாளில் இரண்டாம் சுற்று!

பி.ஏ.பி.,அதிகாரிகள் கூறுகையில்,' பராமரிப்பு பணிகளுக்காக, காண்டூர் கால்வாயில் நேற்று, தண்ணீர் வரத்து குறைந்தது. பணி முடிந்து, நேற்று முதல், முழு அளவு எடுக்கப்படுகிறது. பரம்பிக்குளம் அணையிலிருந்து, திருமூர்த்தி, ஆழியாறு அணைக்கு தண்ணீர் எடுத்ததால், திருமூர்த்திக்கு வரத்து குறைந்து காணப்பட்டது. ஏழு நாட்கள் இடைவெளியில், திருமூர்த்தியில் நீர் சேகரிக்கப்பட்டு, இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X