தமிழ்நாடு

இலவச அரிசி பெற முடியாமல் தவிப்பு!; முதியோருக்கு விடிவு உண்டா?

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020
Advertisement
இலவச அரிசி பெற முடியாமல்  தவிப்பு!; முதியோருக்கு விடிவு உண்டா?

திருப்பூர்:ஓய்வூதியம் பெறும் முதியோரின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்ததால், அரிசி வாங்க முடியாமல், ஏழை, எளிய மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தில், முதியோர் மற்றும் ஆதரவற்ற முதியோருக்கு, மாதம், 1,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறுவோரின், ரேஷன் கார்டுகள் கடந்த ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டது. ஆதரவற்ற நிலையில், தனி ஒருவராக இருந்த முதியோரின், ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.

ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு, சமூகபாதுகாப்புத்துறை மூலம், அரிசி அட்டை வழங்கப் பட்டது. ரேஷன் கடையில், மாதம், 20 முதல், 25 கிலோ அரிசியை, இலவசமாக பெற்று வந்தனர். திருப்பூர் மாவட்டத்தில், 85 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, 35 ஆயிரம் முதியோருக்கு மட்டும் அரிசி அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு, அரிசி அட்டை வழங்கப்படவே இல்லை. ஆதார் அட்டை நகலுடன் விண்ணப்பித்து, அரிசி அட்டை கிடைக்காமல், நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சில முதியோர் கூறியதாவது:ஓய்வூதிய உதவி பெறுவதால், 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. தனிநபர் கார்டுகள் இருக்க கூடாதென, கட்டாயமாக ரத்து செய்யப்பட்டன. அதன்பின், அரிசி அட்டை வேண்டுமென விண்ணப்பித்தும், கிடைக்கவில்லை.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வந்த பின், அரிசி அட்டைகள் பதிவாகாமல் ரத்தாகின.'ஆன்லைனில்' பதிவு இல்லை என, அரிசி வழங்காமல் ரேஷன் கடைகளில் துரத்துகின்றனர். புதிய ரேஷன் கார்டும் வழங்க முடியாது என்று, தாலுகா அலுவலகத்தில் விரட்டுகின்றனர். ஓய்வூதியம் அல்லது அரிசி இரண்டில் ஒன்று மட்டுமே வழங்க முடியுமென, தாலுகா அலுவலகத்தில் மிரட்டுகின்றனர்.

வேறு வழியின்றி, கிலோ ஐந்து அல்லது, 10 ரூபாய் என, சிலரிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி சாப்பிடுகிறோம். ரேஷன் கடையில் சிந்தும் அரிசையை வாங்கிக்கொள்கிறோம். ஏழை, எளிய முதியோர் தடையின்றி சாப்பிட, அரிசி அட்டை வழங்குவதன் மூலம் ரேஷன் அரிசி வினியோகிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் முருகனிடம் கேட்டபோது, ''மாவட்ட அலுவலகம் மூலம், அரிசி அட்டை புதிதாக வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவையான பயனாளிகள், ஆதார் நகலுடன் விண்ணப்பித்தால், அரசிடம் கேட்டு, ஒதுக்கீடு பெற்றுத்தரப்படும். ஓய்வூதியதாரருக்கு, ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X