இந்தியா

சட்டசபை கூடுகிறது! தீர்மானம் கொண்டு வருவதில் அரசு தீவிரம்.....புதுச்சேரி அரசில் உச்சக்கட்ட பரபரப்பு

Added : பிப் 12, 2020
Advertisement
 சட்டசபை கூடுகிறது!  தீர்மானம் கொண்டு வருவதில் அரசு தீவிரம்.....புதுச்சேரி அரசில் உச்சக்கட்ட பரபரப்பு

புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. சிறப்பு கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என, முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என, கவர்னரை, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்து மனு அளித்தனர்.'உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் புதுச்சேரி உள்ளதால், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அதிகாரம் இல்லை' என பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரிடம் தெரிவித்தனர். மேலும், யூனியன் பிரதேச சட்டத்தையும், சட்டசபை விதிகளையும் சுட்டிக் காட்டினர்.இதைதொடர்ந்து, முதல்வர் நாராயணசாமிக்கு, கவர்னர் கிரண்பேடி கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில், 'பார்லிமெண்டின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்து, சட்டமாக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிப்பதோ, முடிவெடுப்பதோ புதுச்சேரி சட்டசபைக்குள்ள அதிகாரத்துக்குள் வராது. மேலும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது' என, கவர்னர் தெரிவித்துள்ளார்.
கவர்னரின் கடிதம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் நேற்று கருத்து கேட்டபோது, சட்டசபை சிறப்பு கூட்டம் நடக்க உள்ளதை சுட்டிக் காட்டி பதிலளிக்க மறுத்து விட்டார். சட்டசபை மரபுபடி, சபையில் பதில் அளிக்கப்படும் என, தெரிவித்தார்.இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில், புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நேரடியாக தீர்மானம் நிறைவேற்றப்படுமா அல்லது தீர்மானத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுமா என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'லிப்ட்' தவிர்த்த தலைமைச் செயலர்
'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக புறப்பட்ட தலைமைச் செயலர் அஸ்வனிகுமாருக்கு ராஜ்நிவாசில் இருந்து அவசர அழைப்பு வந்தது.இதைதொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயத்திடம் தகவல் தெரிவித்துவிட்டு, கருத்தரங்க கூடத்தில் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்த ஊழியர்கள் ஓடிச் சென்று லிப்டை தயார் செய்தனர். அதை கண்டு கொள்ளாத தலைமைச் செயலர், படிக்கட்டுகள் வழியாக மூன்றாவது மாடியில் இருந்து விறுவிறுவென இறங்கி ராஜ்நிவாஸ் நோக்கி காரில் விரைந்தார்.ராஜ்நிவாசில் அஸ்வனிகுமாருடன், கவர்னர் கிரண்பேடி தீவிர ஆலோசனை நடத்தினார். குடியுரிமை திருத்த சட்ட தீர்மான விவகாரம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
சட்ட வல்லுனர்களுடன்முதல்வர் ஆலோசனை
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அதிகாரம் இல்லை என கவர்னர் அனுப்பிய கடிதத்தால் ் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் நாராயணசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு உண்டு என்று நிபுணர்கள் சிலரும், சட்டத்தை விமர்சனம் செய்வதற்கு அதிகாரம் கிடையாது என்று சிலரும் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.புதுச்சேரி சட்டக் கல்லுாரியில் பி.எல்., படித்தவர் முதல்வர் நாராயணசாமி. பின், அண்ணாமலை பல்கலையில் எம்.எல்., படிப்பையும் முடித்தார். எம்.பி.,யாவதற்கு முன், பல ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி உள்ளார்.சட்ட வல்லுனர்களின் கருத்துக்களை கேட்டு, கவனத்துடன் பரிசீலனை மேற்கொண்டுள்ளார். எனவே, தீர்மானத்தில் வார்த்தைகள் கவனமாக கையாளப்படும் என தெரிகிறது.தீர்மானத்தை அச்சிடுவது உள்ளிட்ட பணிகளிலும், சிறப்பு கூட்டம் தொடர்பான ஏற்பாடுகளிலும், சட்டசபை செயலர் வின்சன்ட் ராயர் மற்றும் சட்டசபை செயலக ஊழியர்கள் விடிய விடிய பணியாற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X