அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : பிப் 12, 2020
Share

சிதலமடைந்த கம்பம் சரி செய்யப்படுமா? சத்தியமங்கலம் ஒன்றியம், கொமரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடியிருப்பு அருகே, மூன்று தெருவிளக்கு மின்கம்பங்கள் பராமரிப்பின்றி, சிதிலமடைந்து உடையும் நிலையில் உள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மின்கம்பத்தை மாற்றித் தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வழிகாட்டி பலகையை மறைக்கும் முட்செடி: நம்பியூர் அருகே கோசணம் வழியாக, கொளப்பலூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், மூனாம்பள்ளி பிரிவு சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகையை மறைத்து, முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், நாளடைவில் வழிகாட்டி பலகை, வாகன ஓட்டிகள் அறிய முடியாத சூழல் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அல்லது பஞ்., நிர்வாகம் முட்செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

அகற்றாத பாட்டில்கள் துர்நாற்றத்தால் அவதி: ஈரோடு பஸ் ஸ்டாண்டில், குப்பை தொட்டி உள்ளது. காலி குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை, பயணிகள் போடுகின்றனர். ஆனால், முறையாக அவைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காததால், குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால், குளிர்பான பாட்டில்களை போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் நினைத்த இடத்தில் காலி குடிநீர் பாட்டில்களை வீசி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

குப்பைதொட்டி வைக்கப்படுமா? அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் அருகில், காமராஜர் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் குப்பைத்தொட்டி கிடையாது. இதனால், சாலைகளில் வந்து மக்கள் குப்பை கொட்டி செல்கின்றனர். குப்பையை நாய்கள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சிதறிக்கிடக்கும் குப்பையால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து, குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்.

சுகாதார வளாகத்தை பராமரிக்க கோரிக்கை: மொடக்குறிச்சி யூனியன், வடுகபட்டி பேரூராட்சி, சிவகிரி அரச்சலூர் ரோட்டில் சாலையோரத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தில், தண்ணீர் இல்லாததால், மக்கள் பயன்படுத்த முடியவில்லை. பராமரிப்பு இல்லாமல் உள்ளது. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க, 2003ல், கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X