கிருஷ்ணகிரி: மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்ட அறிக்கை: நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருது, திருநங்கையர் தினமான ஏப்.,15ல் வழங்கப்பட உள்ளது. இந்த சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு, பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளனர். இவ்வாறு, இந்த சமுதாயத்தில் சமநிலை அடைந்துள்ளதே அவர்கள் படைத்த சாதனையாகும். சாதனை படைத்த மூன்றாம் பாலினத்தவரை கவுரவிக்கும் வகையிலும், மற்ற மூன்றாம் பாலினத்தவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் செயல்படும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, இந்த விருது வழங்கப்பட உள்ளது. விருதுடன், 1 லட்ச ரூபாய் காசோலை வழங்கப்படும். இதற்காக விண்ணப்பிப்பவர்கள், அரசு உதவி பெறாமல், தாமாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது, ஐந்து மூன்றாம் பாலினத்தவருக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது. விருதுக்கு தகுதியான நபர்கள், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், அறை எண், 21ல் உள்ள, மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று, ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE