அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடியாகுமா? பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடியாகுமா? பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : பிப் 12, 2020
Share

நாமக்கல்: ''கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்வதுடன், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும்,'' என, இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின், தேசிய தலைவர் விருத்தகிரி கூறினார்.
இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில், 2016 சட்டசபை தேர்தலில், விவசாயிகளின் வங்கி கடன் ரத்து செய்யப்படும் என, அ.தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதன்படி, கூட்டுறவு வங்கிகளில், சிறு, குறு விவசாயிகள் பெற்ற விவசாய கடன்களை ரத்து செய்யப்பட்டன. ஆனால், பெரிய விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படவில்லை. விவசாயிகள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என, உத்தரவிட்டது. அவற்றை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. விவசாயிகளின் நலன் கருதி, மேல்முறையீட்டு மனுவை, தமிழக அரசு வாபஸ் பெறுவதுடன், மதுரை கிளை உத்தரவுப்படி, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வரும், 14ல் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதில், இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இல்லை என்றால், விவசாயிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். மேலும், தமிழக கரும்பு விவசாயிகளுக்கு, மூன்று ஆண்டுகளாக, மத்திய அரசு தொடர்ந்து, டன் ஒன்றுக்கு, 2,750 ரூபாய், நியாயமான ஆதாய விலையாக, ஒரே விலையை வழங்கி வருகிறது. தமிழக அரசு, மூன்று ஆண்டுகளாக, மாநில அரசின் பரிந்துரை விலையை வழங்கவில்லை. ஆனால், 2018-19ல், 200 ரூபாய், 2019-2020ல், 137.50 ரூபாய், கட்டுமான குறைவால் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடுகட்டுவதற்காக, ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. ஆண்டுக்கு, 200 நாட்கள் இயங்கிய ஆலைகள், தற்போது, 100 நாட்களை தாண்டாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழகத்தில், கரும்பு சாகுபடி குறைந்ததால், பாதி சர்க்கரை ஆலைகள் இயங்கவில்லை. கரும்புக்கு, லாபகரமான விலை கொடுத்தால் மட்டுமே, அதன் உற்பத்தியை பெருக்க முடியும். வேளாண் விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலையே நீடித்து வருகிறது.

இதற்கிடையில், வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது. கடன் தொல்லையால் அலைக்கழிக்கப்படுகின்றனர். வங்கி முன், 'நாணயமற்ற நாணயஸ்தர்கள்' என, புகைப்படத்தை ஒட்டி அசிங்கப்படுத்துகின்றனர். மேலும், வாங்கிய கடனுக்கு ஜப்தி போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால், 1,000 கோடி, 5,000 கோடி ரூபாய் கடன் வாங்கியவர்களின் புகைப்படத்தை வங்கி வாசலில் ஒட்டுவதில்லை. அதனால், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்வதுடன், உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவையும் வாபஸ் பெற வேண்டும். அவை, தமிழக பட்ஜெட்டில் இடம் பெறும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X