சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட் எதிர்பார்ப்பு! சிறுமுகை- காவிலிபாளையம் திட்டம் நிறைவேறுமா?வறண்ட குட்டைகளில் நீர் நிரப்பிட வலியுறுத்தல்

Added : பிப் 12, 2020
Advertisement

மேட்டுப்பாளையம் : விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, சிறுமுகை - காவிலிபாளையம் பாசன திட்டத்துக்கு, வரும் பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி மற்றும் பாலக்காடு மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் பெய்யும் கனமழை, பில்லூர் அணை மற்றும் பவானி ஆறு வழியாக, பவானிசாகர் அணை வந்து சேர்கிறது. இந்த அணை நிறைந்தால், உபரி நீர், பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. பவானிசாகர் அணை, கடந்த ஆறு மாதங்களாக நிறைந்திருந்த போதும், அணையின் அருகே உள்ள பகுதிகள், தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கின்றன.இதனால் பவானி ஆற்றில் இருந்து, குழாய் மூலம் தண்ணீர் பம்பிங் செய்து, காரமடை, அன்னுார், பவானிசாகர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள, 17 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில், சிறுமுகை -- காவிலிபாளையம் பாசன திட்டத்தை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்ட பா.ஜ., செயலாளர் சக்திவேல் கூறியதாவது:இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தினால், 17 ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கணக்கான குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்படும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகளில் நீரூற்று கிடைக்கும்; ஆயிரக் கணக்கான ஏக்கருக்கு நீர் பாசன வசதி கிடைக்கும். எனவே, சிறுமுகை விஸ்கோஸ் அருகே, பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, குழாய் மூலம், ஊராட்சிகளில் உள்ள, குளம் குட்டைகள்நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பவானி சாகர் அணை அருகே இருந்தும், பெத்திக்குட்டை, இரும்பறை, சின்னகள்ளிபட்டி, முடுதுறை ஆகிய ஊர்களில் உள்ள குட்டைகள், தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கின்றன. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாமல் தரிசு நிலங்களாக போடப்பட்டுள்ளன. கடந்தாண்டு பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமும் அறிவிக்கவில்லை, நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே, வரும் பட்ஜெட்டில், சிறுமுகை - -காவிலிபாளையம் திட்டத்தை அறிவித்து, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


முதல்வர் அறிவிப்பு!



சிறுமுகை, காவிலிபாளையம் பாசன திட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி கூறுகையில், ''இத்திட்டம் குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழக முதல்வர் பழனிசாமி, கோவையில் நடந்த விழாவில், அவிநாசி -- அத்திக்கடவு திட்டத்தில், விடுபட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து, நிதி ஒதுக்குவதாக அறிவித்தார். அதில், சிறுமுகை -- காவிலிபாளையம் திட்ட பகுதிகளும் இடம் பெற்றுள்ளன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X