பொது செய்தி

தமிழ்நாடு

ஓராண்டாச்சு! தொழில்நுட்ப குழு அறிக்கை அரசுக்கு வழங்கி... ஆனைமலையாறு- நல்லாறு அணைத்திட்டம்

Added : பிப் 12, 2020
Advertisement

உடுமலை : பி.ஏ.பி., திட்டத்தில், ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்டுவதற்கான, தொழில்நுட்ப கமிட்டி அறிக்கை அரசுக்கு வழங்கி, ஒரு ஆண்டாகியும் பணிகள் துவங்கவில்லை.

நடப்பு பட்ஜெட்டில், இதற்கான நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இத்திட்டத்தின் கீழ், கேரளா அரசு இடைமலையாறு அணையையும், தமிழக அரசு ஆனைமலையாறு மற்றும் நல்லாறு அணைகள் கட்ட திட்டமிடப்பட்டது.கேரளா அரசு அணை கட்டிய நிலையில், 60 ஆண்டுகளாக ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்டப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதனால், பி.ஏ.பி., பாசன திட்ட நிலங்களுக்கு ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை, 84 நாட்களுக்கு மட்டும் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் கொடுக்கப்படுகிறது. சிறப்பான இத்திட்டம், அணைகள் கட்டப்படாமல் கேள்விக்குறியாகி வருகிறது.இத்திட்டத்தில், நல்லாறு அணை, மேற்கு தொடர்ச்சிமலை, குழிப்பட்டி பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டது. முழுக்க முழுக்க தமிழக பகுதியில் அமையும் இந்த அணை கட்டினால், 16 கி.மீ., டணல், 4 கி.மீ., வாய்க்கால் என, 20 கி.மீ., துாரத்தில், திருமூர்த்தி அணைக்கு நீர் வந்து சேரும்; இதில், 7.5 டி.எம்.சி., நீர் தேக்க முடியும்.

தற்போது, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, நுாறு கி.மீ., துாரம் மலைப்பகுதிகளில் பயணம் செய்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வருகிறது. இதனால், நீர் இழப்பு அதிகரிப்பு, காலதாமதம் ஏற்படுகிறது.எனவே, கூடுதல் நீர் சேமிப்பு, விரைவாக நீர் கொண்டு வரும் திட்டமான நல்லாறு அணை மற்றும், 2.5 டி.எம்.சி., நீர் சேமிக்கும், ஆனைமலையாறு அணை கட்ட வேண்டும் என பி.ஏ.பி., விவசாயிகள் அரை நுாற்றாண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.விவசாயிகள் போராட்டத்தையடுத்து, நல்லாறு, ஆனைமலையாறு கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்ய, தொழில் நுட்பக்குழுவை தமிழக அரசு அமைத்தது.

தொடர்ந்து இழுபறியானதால், திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தி, விவசாயிகள், கடந்த ஆண்டு, அக்.,15ல் திருப்பூர் கலெக்டர் அலுவலக முற்றுகை பேரணி நடத்தினர். அப்போது நடந்த பேச்சு வார்த்தையில், தொழில் நுட்ப குழு திட்ட அறிக்கை ஆய்வு மற்றும் தமிழக முதல்வரை சந்தித்து நிதி பெறுவது ஆகிய பணிகளை, அக்.,31க்குள் நிறைவு செய்வது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், மேலும் மூன்று மாதம் இழுபறியாகி, ஜன.,மாதம் இறுதியில் திட்ட அறிக்கை வழங்கப்பட்டது.

அதில், ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதன் மூலம், பி.ஏ.பி., பாசனத்திற்கு, 10 டி.எம்.சி., வரை கூடுதல் நீர் கிடைக்கும். இரு இடங்களில், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து, மின் உற்பத்தியும் செய்ய முடியும், என தெரிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், கேரளா அரசுடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால், ஒரு ஆண்டாகியும், பேச்சு வார்த்தை இறுதியாகாமலும், அணைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் துவங்கவில்லை.

நம்ம நல்லாறு இயக்க ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் கூறுகையில்,'திட்ட அறிக்கை தயாரித்து, கேரளா அரசுடன் பேச்சும் நடத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையை விரைவில் முடித்து, அணைகள் கட்டுவதற்கான பணிகளை துவக்க வேண்டும். இதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X