துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் இல்லை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் இல்லை

Added : பிப் 12, 2020
Share

உடுமலை : அரசுப்பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக துப்புரவு பணியாளர்களுக்கு, பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், பள்ளிகளின் துாய்மைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பது, சில பள்ளிகளில், அப்பணியாளர்களே இல்லாத நிலை இருந்ததால், கழிப்பறையை துாய்மைப்படுத்தவும், ஆட்கள் இல்லாமல் சுகாதாரம் கேள்விக்குறியானது.வாரம் ஒரு முறை என, பள்ளியின் சார்பில், அந்த ஊராட்சியின் துப்புரவு பணியாளர்களை நியமித்து, சுகாதார பணிகளை செய்தனர். இவ்வாறு நியமிக்கப்படும் பணியாளர்கள், தொடர்ச்சியாக வராததால், துப்புரவுப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதன் தீர்வாக, அரசுப்பள்ளிகளுக்கு தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.

துவக்கம், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, பள்ளிகளின் நிலை வாரியாக, அங்கு நியமிக்கப்படும் துப்புரவு பணியாளர்களுக்கான ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது.திட்டத்தின் துவக்கத்தில், முதல் மூன்று மாதங்களுக்கென ஊதியம் வழங்கப்பட்டது. இதனால், பணியாளர்களும் சுறுசுறுப்புடன் துப்புரவுப்பணிகளை மேற்கொண்டனர். இரண்டாவது முறை, மூன்று மாதம் நிறைவடைந்ததும், மொத்தமாக ஊதியம் வழங்கப்பட்டது.இதனால், பல பள்ளிகளில் ஊதியம் வழங்கப்படாத இடைபட்ட காலங்களில் துப்புரவு பணியாளர்கள் வராத நிலையும் ஏற்பட்டுள்ளது.தற்போது வரை, இப்பிரச்னை தொடர்கிறது.

கடந்த ஜூன் மாதம் முதல், உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியத்தில், துப்புரவு பணியாளர்களுக்கான ஊதியம் வழங்கவில்லை. பல பள்ளிகளிலும், ஊதியம் வழங்கிய பின்னர் தான் பணிக்கு வருவதாக கூறி துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வராமல் உள்ளனர்.ஒன்றிய பொது நிதியிலிருந்து, துப்புரவு பணியாளர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இதுவரை ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்துகின்றனர்.பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது:மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என ஊதியம் வழங்கப்படுவதால், துப்புரவுப்பணியாளர்கள் அதிருப்தியடைகின்றனர்.

துப்புரவு பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, பள்ளி நிர்வாகத்தினர் மூலம் ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதால், திட்டம் செயல்படுத்தப்பட்டும், பள்ளிகளில் சுகாதாரம் பாதிப்படைகிறது. மாதம்தோறும், தடையின்றி, ஊதியம் வழங்குவதால் மட்டுமே துப்புரவு பணிகள் துரிதமாக நடக்கும். கடந்தாண்டு, மார்ச், ஏப்.,மாதத்துக்கான ஊதியம் ஜூன் மாதம் வழங்கப்பட்டது. ஆனால், ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரை உள்ள ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X