சேலம்: இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டனர்.
சேலம், புது பஸ் நிலையம் எதிரேவுள்ள, வசந்தம் ஓட்டல் சாலையில், சுப்ரமணி, 58, அவரது மகன் பாலசுப்ரமணி, 35, ஆகியோர், 'ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிதி நிறுவனத்தை துவங்கினர்.இதில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், முதல், ஐந்து மாதத்துக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.ஆறு மாதத்துக்கு பின், 1 லட்சம் ரூபாய் மீண்டும் வழங்கப்படும். 1 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து, ஐந்து மாதம் பணம் பெறாதபட்சத்தில், ஆறாவது மாதத்தில், செலுத்திய பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என, கவர்ச்சி விளம்பரங்களை அறிவித்தனர்.
அதை நம்பி, சின்னதிருப்பதி, அபிராமி கார்டனைச் சேர்ந்த சிவா, 30, என்பவர், 2019 ஜனவரியில், 1 லட்சம் ரூபாய் செலுத்தினார். பணத்தை பெற்ற அவர்கள், தாங்கள் அளித்த உறுதிமொழிப்படி, எந்த பணத்தையும் தர மறுத்துவிட்டனர். சிவா, இது குறித்து, 1ம் தேதி, மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்திலிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, சுப்ரமணி, பாலசுப்ரமணி ஆகியோரை, நேற்று கைது செய்தனர். மேலும், நிதி நிறுவன இணை இயக்குனர் வினோத், 42, என்பவரை, தேடி வருகின்றனர்.இந்நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தோர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE