கோத்தகிரி : கோத்தகிரியில் பணி செய்து கொண்டிருந்தபோது, தரக்குறைவாக பேசியவர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, துப்புரவு பணியாளர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி சிறப்புநிலை பேரூராட்சியில், 22 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் அன்றாட சேகரமாகும் குப்பைகளை, 27 நிரந்தர தொழிலாளர்கள் உட்பட, பல தற்காலிக தொழிலாளர்கள், நாள்தோறும் சேகரித்து வளம் மீட்பு பூங்காவில் சேர்கின்றனர். தவிர, கழிவுநீர் கால்வாய் தூர்வாரி, பொது இடங்களை கூட்டி பெருக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பேரூராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தல் படி, கோத்தகிரி பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, அப்பகுதியில் கடை வைத்துள்ள கலைச்செல்வன் என்பவர், 'தனது கடை முன் உள்ள கழிவுகளை முதலில் அகற்ற வேண்டும்,'என, கூறியுள்ளார். துப்புரவு பணியாளர்கள், 'அருகிலுள்ள கால்வாயை தூர்வாரிய பின்பு, உங்கள் கடை முன் உள்ள கழிவுகளை எடுப்போம்,' என, கூறியுள்ளனர். இதனை ஏற்காத கலைச்செல்வன், துப்புரவு பணியாளர்களை தகாத வார்த்தையில் திட்டியதுடன், 'வேலை இல்லாமல் செய்து விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.
தொழிலாளர்கள் கொடுத்த தகவல்படி, மேற்பார்வையாளர்கள் சந்திரசேகரன் மற்றும் தங்கராஜ் ஆகியோர், விசாரித்து கொண்டிருந்தபோது, சம்பந்தப்பட்டவர் மீண்டும் தொழிலாளர்களை திட்டியுள்ளார். இதனால், அதிருப்தியடைந்த துப்புரவு தொழிலாளர்கள், கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து, 'சம்பந்தப்பட்டவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தனர்.
பின்பு, நடந்த பேச்சுவார்த்தையில், போலீசார் கூறுகையில், 'பேரூராட்சி அதிகாரிகளிடம் பேசி, பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என்றனர். இதனை அடுத்து, துப்புரவு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால், காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE