அஞ்சல் தலை சேகரித்தால் பொது அறிவு வளரும்: அஞ்சல் துறை தலைவர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அஞ்சல் தலை சேகரித்தால் பொது அறிவு வளரும்': அஞ்சல் துறை தலைவர்

Added : பிப் 12, 2020
Share
 'அஞ்சல் தலை சேகரித்தால் பொது அறிவு வளரும்': அஞ்சல் துறை தலைவர்

சென்னை: ''அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கத்தால், பொது அறிவும், கல்வி அறிவும் வளரும்,'' என, சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்ட, தமிழக அஞ்சல் துறை தலைவர் சம்பத் தெரிவித்தார்.

அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க விழா, 'கிளப் பெட்ஸ் - -2020' என்ற தலைப்பில், சென்னை, அண்ணாசாலை, தலைமை அஞ்சலகத்தில் நேற்று நடந்தது.தமிழக அஞ்சல் துறை தலைவர் சம்பத், விழாவை துவக்கி வைத்து, சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு பேசியதாவது:அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கத்தால், பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம். கல்வி அறிவும் பெருகும். இந்த பழக்கத்தால், கிராமத்தில் வசித்த ஒருவர் ஐ.பி.எஸ்., அதிகாரியான நிகழ்வும் நடந்து உள்ளது.அஞ்சல் தலை சேகரிக்கும் ஆர்வத்தை, பள்ளி மாணவ - மாணவியரிடம் கொண்டு செல்லும் வகையில், சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சங்கத்தில் உள்ளவர்கள், பல்வேறு தகவல்களை சேகரித்து, பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.பள்ளி ஆசிரியர்களும், அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல, கடிதம் எழுதுவது, தன் தனித்திறனை வளர்த்துக் கொள்ள உதவும். 'வாட்ஸ் ஆப்' போன்ற செயலியால், எழுதும் திறன் குறைந்து போகிறது. எனவே, கடிதம் எழுதவும், அஞ்சல் துறை ஊக்குவித்து வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.

இதையடுத்து, மாணவ - மாணவியரின் அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த கண்காட்சியை, சம்பத் திறந்து வைத்தார்.அஞ்சல் தலை சேகரிப்பில் சிறந்து விளங்கிய மாணவ - மாணவியர், சான்றிதழ், பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.நிகழ்ச்சியில், மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதி, அஞ்சல் தலை சேகரிப்பு சங்க மூத்த உறுப்பினர் அமர்சந்த், அஞ்சல் சேவை இயக்குனர் கோவிந்தராஜன், அண்ணா சாலை தலைமை அஞ்சலக தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X