அரசு பள்ளிக்குள் கரடிக்கு வலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிக்குள் கரடிக்கு 'வலை'

Added : பிப் 12, 2020
Share

ஊட்டி : ஊட்டி நஞ்சநாடு கிராமத்தில், அரசு ஆரம்ப பள்ளிக்குள் நுழைந்த கரடியை வனத்துறையினர், 20 பேர் வலை விரித்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோத்தகிரி தொத்தமுக்கை கிராமத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன், கரடி தாக்கியதில், கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர்.இதேபோல, மஞ்சூர் பகுதியிலும், பகல் நேரத்திலேயே கரடி நடமாட்டம் இருந்து வருகிறது. மேலும், ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தில், 20 நாட்களுக்கு மேலாக, கரடி சுற்றி வருகிறது.இதனால், கிராம மக்கள் அச்சமடைந்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்தும், கரடியை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கிராம மைய பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்திற்குள் கரடி புகுந்துள்ளது. அச்சமடைந்த பெற்றோரின் வற்புறுத்தலின் படி, 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வலைவிரித்து கரடியை பிடிக்க, இரவு முயற்சி மேற்கொண்டனர்.இருள் சூழ்ந்ததால், வனத்துறையினரால் கரடியை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்றும் கரடியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இப்பகுதி மக்கள் கூறுகையில்,' ஆரம்பப்பள்ளி வளாகத்தில் கரடி நடமாடி வருவதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் அச்சம் நிலவி வருகிறது. அசம்பாவிதம் நடக்கும் முன்பு, வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்,' என்றனர். உதவி வனப்பாதுகாவலர் சரவணன் கூறுகையில்,'' அப்பகுதியில் இரவு, பகலாக கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த பின்பு, கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X