சென்னை: தமிழக அரசின் 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் வகையில் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டசபை நாளை காலை 10:00 மணிக்கு கூடுகிறது. நிதித் துறையை கவனித்து வரும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2019 - 20ம் ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரத்து 315 கோடி ரூபாயாக இருந்தது.
வருங்காலத்தில் நிதிநிலை பராமரிப்பில் உறுதித்தன்மை ஏற்பட்டு வருவாய் பற்றாக்குறை படிப்படியாக குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் அந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடன் 3.97 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது.
அ.தி.மு.க. ஆட்சி அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது. எனவே அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். எனவே சட்டசபை தேர்தலை மனதில் வைத்து நாளை தாக்கலாகும் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் ஏராளம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. அந்த எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்களும் உள்ளனர்.
நீர்நிலைகளில் நடந்து வரும் குடிமராமத்து பணிக்கு விவசாயிகளிடம் வரவேற்பு உள்ளதால் இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. புதிய மாவட்டங்கள், தாலுகாக்கள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகலாம் என்றும் தெரிகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் சபையின் அலுவல் ஆய்வுக் குழு கூடி பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யும்.
எதிர்கட்சிகள் திட்டம்:
பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, குடியுரிமை திருத்த சட்டம் பிரச்னை, 'ஹைட்ரோ கார்பன்' திட்டம், 'குரூப் - 4' தேர்வு முறைகேடு உட்பட பல்வேறு பிரச்னைகளை, எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக மாற்ற, சட்டம் இயற்றும்படியும், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் கொண்டு வரும்படியும், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன.
திட்ட நிலை அறிக்கை!
'பட்ஜெட் அறிக்கையோடு, திட்ட நிலை அறிக்கையையும் வெளியிட வேண்டும்' என, சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் பொதுச் செயலர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை: ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போதும், பல்வேறு துறைகளுக்கு, நிதி ஒதுக்கப்படுவதும், சிறப்பு திட்டங்கள், புதுப்புது திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இவை குறித்த செயல் அறிக்கை எதுவும், பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாவதில்லை.எனவே, பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அல்லது பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவதற்குள், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்த அறிக்கையையும், நிதி அமைச்சர் வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE