புத்தகத்தில் சில பகுதியை நீக்க என்ன நடைமுறை சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'புத்தகத்தில் சில பகுதியை நீக்க என்ன நடைமுறை' சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Share

சென்னை: பாடப்புத்தகங்களில் சில பகுதிகளை நீக்க என்ன நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதற்கு அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தாக்கல் செய்த மனு: பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் 'ஹிந்து மகாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன' என கூறப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில் அடுத்ததாக புத்தகம் அச்சிடும்போது குறிப்பிட்ட பகுதி நீக்கப்படும் என்றும் ஏற்கனவே வினியோகிக்கப்பட்ட புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கான சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற கருத்தில் தவறு இல்லை. அது வரலாற்று உண்மை. புத்தகத்தில் இருந்து தன்னிச்சையாக நீக்க கல்வி ஆராய்ச்சி குழு வுக்கு அதிகாரம் இல்லை

நடப்பாண்டு ௨௦௨௦ ஜன.௧௦ல் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஆர்.எஸ்.எஸ். குறித்த பகுதியை நீக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் ஹேமலதா அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.இளங்கோவன் ''உணர்வுகள் அடிப்படையில் வரலாற்றை திருப்பி எழுத முடியாது; புத்தகத்தில் இடம் பெற்ற குறிப்பு வரலாற்றில் ஒரு பகுதி தான்'' என்றார்.

அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி ''ஏற்கனவே இந்தப் பிரச்னை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பதில் மனு தாக்கல் செய்யஅவகாசம் வேண்டும்'' என்றார்.

இதையடுத்து பாடத்திட்டம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது; பாடப்புத்தகத்தில் குறிப்பிட்ட பகுதியை நீக்க என்ன நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை மார்ச் ௧௯க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X