இந்து முன்னணி நிர்வாகி கார் எரிப்பு: திருப்பூரில் பஸ்கள் மீது கல்வீச்சு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி நிர்வாகி கார் எரிப்பு: திருப்பூரில் பஸ்கள் மீது கல்வீச்சு

Added : பிப் 12, 2020
Share
 இந்து முன்னணி நிர்வாகி கார் எரிப்பு: திருப்பூரில் பஸ்கள் மீது கல்வீச்சு

திருப்பூர் : திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகியின் கார் எரிக்கப்பட்டதை கண்டித்து, சில பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மூன்று பஸ்கள், கல் வீசி தாக்கப்பட்டன.

திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம், 45. இந்து முன்னணி கோட்ட செயலாளர். நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டு வளாகத்தில், 'ஹோண்டா பிரீஸா' காரை நிறுத்தியிருந்தார்.நேற்று அதிகாலை, 3:30 மணியளவில், அவரது கார் எரிந்தது. பக்கத்து வீட்டினர் பார்த்து மோகனசுந்தரத்துக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பூர் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், கார் எரிந்த இடத்துக்கு சென்று விசாரித்தார்.இந்து முன்னணி தொண்டர்கள், 500க்கும் மேற்பட்டோர், காலை, 8:00 மணிக்கு கொங்கு மெயின் ரோட்டில், மறியலில் ஈடுபட்டனர்.

காருக்கு தீ வைத்தவர்களை, கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக, கமிஷனர் உறுதி அளித்ததால், மறியல் கைவிடப்பட்டது.பஸ் மீது கல்வீச்சு கார் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கொங்கு மெயின் ரோடு, தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு ஆகிய பகுதிகளில் சில கடைகள் அடைக்கப்பட்டன. போயம்பாளையம், நஞ்சப்பா நகரில், இரண்டு பேக்கரிகளை, சிலர் கல்வீசி தாக்கினர். கூலிபாளையம் மற்றும் கொங்கு மெயின் ரோடு வழியே சென்ற ஒரு மினி பஸ், இரண்டு அரசு பஸ் மீது, கற்கள் வீசப்பட்டன.


தீவிர விசாரணை


வடக்கு போலீசார் கூறுகையில், 'கார் எரிந்த பகுதியில் கிடைத்த 'சிசிடிவி' கேமரா பதிவில், இரண்டு டூவீலரில், நான்கு பேர் வருவதும், மோகனசுந்தரம் வீட்டின் முன், நோட்டமிடுவதும் தெரியவந்துள்ளது. கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு, டூவீலரில் பார்வையிட்டு, அடுத்த சில நிமிடங்களில், நடந்து வந்து காருக்கு தீ வைத்துள்ளனர்' என்றனர்.இன்று ஆர்ப்பாட்டம்இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறுகையில், ''இந்து முன்னணி நிர்வாகிகளை குறி வைத்து, தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதை யார் செய்கின்றனர், என்பது போலீசுக்கு நன்றாக தெரிந்தும் கூட, கைது செய்ய பயப்படுகின்றனர். திருப்பூரில், கோட்ட செயலாளரின் காரை எரித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நாளை (இன்று) மாலை, 4:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X