பொது செய்தி

இந்தியா

பூச்சிக் கொல்லி மருந்தால் பாதிப்பா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Added : பிப் 13, 2020
Advertisement

புதுடில்லி: போலி மற்றும் வீரியம் மிகுந்த பூச்சிக் கொல்லி மருந்துகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் பூச்சிக் கொல்லி மருந்து நிர்வாக மசோதாவை தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பா.ஜ.வைச் சேர்ந்த மத்திய செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:

விவசாயிகள் சந்திக்கும் மிகப் பெரும் பிரச்னையாக பூச்சிக் கொல்லி மருந்து உள்ளது. போலி மற்றும் வீரியம் மிகுந்த மருந்துகளை பயன்படுத்துவதால் அனைத்து வகையிலும் பாதிக்கப்படுவது விவசாயிகளே.

பூச்சிக் கொல்லி மருந்து நிர்வாகம் தொடர்பாக 2008ல் மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் அது தாக்கல் செய்யப்படவில்லை. இது தொடர்பாக பார்லிமென்ட் நிலைக்குழுவுடன் விவாதித்து புதிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளோம். பூச்சிக் கொல்லி மருந்து தொடர்பாக தற்போதுள்ள சட்டம் 1968ல் அமலுக்கு வந்தது. தற்போது நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

இந்த புதிய மசோதாவின்படி அனைத்து பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும். போலி மருந்து மற்றும் வீரியம் மிகுந்த மருந்துகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும்.

பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் அரசு செலுத்தும் தொகையுடன் இதற்காக தனியாக நிதி உருவாக்கப்படும். மேலும் இயற்கை உரங்களை பயன்படுத்த விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவர். ஒவ்வொரு மருந்தின் சாதக - பாதகங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்

என்பது உள்ளிட்ட தகவல்கள் அனைத்து மொழிகளிலும் அரசின் இணையதளத்தில் உள்ளது. விவசாயிகளின் நலனுக்காக இந்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது. தற்போது அனைத்து துறைமுகங்களும் 1963ல் அறிமுகம் செய்யப்பட்ட சட்டத்தின் கீழ் வருகின்றன. அதை மாற்றி 12 பெரிய துறைமுகங்களை மேம்படுத்தும் வகையில் பெருந்துறைமுகங்கள் ஆணையச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

நேரடி வரி மசோதாநேரடி வரி தொடர்பான வழக்குகள் அதிகம் தேங்குவதை தடுக்கும் வகையில் சமரச திட்டம் அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 9 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான வழக்குகள் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் சமரச திட்டத்துக்கான மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு நிறுவனங்கள்பொதுத் துறை நிறுவனங்களான மூன்று பொது காப்பீட்டு நிறுவனங்களின் நிதி நிலையை வலுப்படுத்தும் வகையில் 2,500 கோடி ரூபாயை மத்திய அரசு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பதற்காக அண்டை நாடான இலங்கையுடன் ஒப்பந்தம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X