அறவே வேண்டாம் ஆபிஸ் 'டென்ஷன்'

Added : பிப் 13, 2020
Advertisement
அறவே வேண்டாம்  ஆபிஸ் 'டென்ஷன்'

அலுவலக சுற்றுச்சூழல் 'எக்கோ' பார்க் போல எல்லோரையும் கவரும் வண்ணம் மனதுக்கு சந்தோஷம், உற்சாகம், புத்துணர்ச்சியை தரும்படி கலகலப்பாக இருக்க வேண்டும். பெரும்பாலான அலுவலகங்கள் 'ஈகோ' பார்க் போல இருக்கின்றன.

ஒருவருக்கொருவர் முகத்தை திருப்பிக் கொள்வது, புறம் பேசுவது, தன்னைவிட படித்தவர் அலுவலகத்திற்கு வந்தால் பொறாமைப்படுவது, மொட்டைக் கடிதம் அனுப்புவது, புதிதாக பணிக்கு வருபவர்களை ஏளனம் செய்வது என பல அலுவலகங்கள் சிறைச்சாலையாக நடந்து கொள்வதால் ஒட்டுமொத்த பணியாளர்களின் நிம்மதி தொலைந்து விடுகிறது.

பணி ஓய்வு பெற்றும்கூட பென்ஷனுடன் டென்ஷனும் பலருக்கு வந்துவிடுகிறது.இளம் வயதில் தாமதமாக எழுந்தால் வெறுப்பை உமிழும் மனைவி, ருசி இல்லை என சிடுசிடுக்கும் கணவன், வேண்டா வெறுப்பாக பள்ளிக்கு கிளம்பும் குழந்தை, சில வினாடிகள் தாமதித்தால் விடாமல் ஹாரன் அடிக்கும் டிரைவர்கள் என காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை கண்களில் வெறுப்பையும், வார்த்தைகளில் நெருப்பையும் உமிழும் முகங்களை வீடு, சாலை, அலுவலகம், கோயில் என எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.

பணத்துடன் தேவையில்லாமல் டென்ஷனையும் சம்பாதித்துக் கொள்வதால் இளம் வயதிலேயே சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய், பக்க வாதம், ஹார்மோன் குறைபாடு போன்ற பல உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு வருகிறோம்.

அலுவலகத்தில் தானும் டென்ஷனாகி, எல்லோரையும் டென்ஷனாக்கும் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள், தாங்கள் இல்லாவிட்டாலும் கூட அலுவலகம் இயல்பாக இயங்கும் என்பதை புரிந்து கொண்டால் சக அலுவலர்களோடு நட்புறவுடன் இயங்கலாம்.

நாம் பணிபுரியும் இடங்களில் நல்லபெயர் வாங்கவேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் இழுத்து போட்டு கொண்டு செய்யும் வேலைகள் மனச்சோர்வு, மனஅழுத்தம், பிறருக்கு நம்மீது தேவையற்ற வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது.

செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் தள்ளிப்போடுவதால் பிறரின் டென்ஷனுக்கு ஆளாகவேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. “பக்திக்கும் மரியாதைக்கும் உரியது கோயில் மட்டுமல்ல, நாம் பணிபுரியும் இடமும் தான்” என்ற அலுவலக வாசல்களின் வாசகம், மனநிறைவுடன் அர்ப்பணிப்புடன் நாம் பணிபுரிய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

யார் காரணம்

ஒரு அலுவலக மனிதவள மேம்பாட்டு அதிகாரிக்கு பல்வேறு நெருக்கடிகள். அவருக்கு கீழ் பணியாற்றுபவர் ஒருவர் மாற்றி ஒருவர் மீது புகார் கொடுத்து பிரச்னையை கிளப்பிக் கொண்டே இருந்தனர். பொறுமை இழந்து போன அந்த அதிகாரி எல்லோருக்கும் போன் செய்தார். “உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிட்டது. உங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தவர் மேல் இன்று நடவடிக்கை எடுக்கப் போகிறேன். உடனே அலுவலகம் வாருங்கள்” என்றார். எல்லோரும் பதிலுக்கு “இதை எதுக்கு சார் எங்ககிட்ட கேக்கிறீங்க, உடனே அந்த ஆளை வேலையை விட்டு துாக்கிட வேண்டியதுதானே” என்றனர்.

அதிகாரியோ பொறுமையாக “அவர் யார் என்று உங்களுக்கு காட்டுகிறேன், அதன்பின் அவரை என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்” என்றார். அவ்வளவுதான்!

அடுத்தநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் அவர் அறை முன் ஒரே கூட்டம். அவர் அறை உள்ளே ஒரு படம் துணி போட்டு மூடப்பட்டிருந்தது. முதலில் நின்றவரை கூப்பிட்டார். “நீங்கள் என்னிடம் புகார் கொடுத்து இருந்தீர்கள், விசாரணை நடத்தி யார் காரணம் என்று கண்டுபிடித்து விட்டேன், அவர் அந்த போட்டோவில் இருக்கிறார். அவர்தான் என்று நீங்கள் உறுதி செய்து விட்டால், அவரை வீட்டுக்கு அனுப்பிவிடலாம்” என்றார்.

துணியால் மூடப்பட்டிருந்த அந்த படத்தை திறந்து பார்த்த புகார்தாரர் அதிர்ந்து போனார். அது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. அவரது முகம் தெரிந்தது. “இவர் தானே உங்கள் பிரச்னைக்கு காரணம், இவரை என்ன செய்யலாம்,” என்றார் அதிகாரி. புகார் கொடுத்தவர் தன் தவறை புரிந்து கொண்டு “மன்னித்து விடுங்கள், இவரை ஒன்றும் செய்ய வேண்டாம்! என் புகாரை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்” எனக் கூறி திரும்பிப் போய்விட்டார்.

இழந்த நிம்மதி
இதுபோல் ஒவ்வொருவராக உள்ளே வந்து அந்த படத்தை திறந்து பார்க்க, தலையை குனிந்தவாறே வெளியில் சென்று விட அன்றிலிருந்து அந்த அலுவலகம் அமைதியாகி விட்டது. பல்வேறு அலுவலக குளறுபடி, பிரச்சனைகளுக்கு தாங்கள் ஒரு முக்கிய காரணம் என்பதை புரியாமலே பலர் நடந்து கொள்கின்றனர்.

அலுவலக பிரச்னைகளை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு விட வேண்டும். வீட்டிற்கு சுமந்து செல்லக்கூடாது. வீட்டு பிரச்னைகளை வீட்டிலேயே விட்டுவிட வேண்டும். அலுவலகத்திற்கு எடுத்து செல்லக் கூடாது.

இப்படி மாறி மாறி சுமை தாங்கி போல சுமந்து செல்வதால் வீட்டிலும், அலுவலகத்திலும் நிம்மதி போய்விடுகிறது. ஒரு முதலாளிக்கு நான்கு பேரில் ஒருவரை தேர்வு செய்து இயக்குனர் பணி உயர்வு கொடுக்க வேண்டிய கட்டாயம். அதற்காக பொறுமை உடைய ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்தார்.

“நான்கு நாட்கள் அலுவலகம் விடுமுறை, ஒவ்வொருவரிடமும் ஒரு குரங்கும், நான்கு நாட்களுக்கு தேவையான உணவையும் கொடுக்கிறேன். பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நான்கு நாட்கள் கழித்து அலுவலகம் வரும் பொழுது இந்த குரங்கை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறி ஒரு சாக்கு மூட்டையில் குரங்கையும், இன்னொரு பையில் அதற்கு தேவையான உணவையும் நான்கு பேரிடமும் கொடுத்துவிட்டார்.

விடுமுறை கழிந்து முதலாளி அலுவலகம் வந்தார். அலுவலக வாசலில் அவர் அறை முன் எல்லோரும் டென்ஷனாக கயிறால் கட்டப்பட்ட தங்கள் குரங்கை இறுக்கமாக பிடித்தபடி நின்றனர். ஒருவர் மட்டும் குரங்கு இல்லாமல் இருந்தார். குரங்கு வைத்திருப்பவர்களைப் பார்த்து முதலாளி கேட்டார், “என்ன! குரங்கு எப்படி இருக்கிறது” என்றார்.

எப்படி பணி செய்ய வேண்டும்

“குரங்கா இது? சேட்டை தாங்க முடியலை, வீட்டுல எல்லா சாமானையும் உடைச்சி, எனக்கு செஞ்ச சாப்பாட்டை சாப்பிட்டு விட்டது. என் புள்ளைங்க புக்கை கிழிச்சுடுச்சு, படுக்கையில் என்னை கீழே தள்ளி விட்டு, என் மனைவி அருகில் படுத்து விட்டது” என எல்லோரும் புலம்ப ஒருவர் மட்டும் அமைதியாக இருந்தார்.

“ஏம்ப்பா, உன் குரங்கு தொலைந்து விட்டதா?” என்றார் முதலாளி. அதற்கு அவர் “நீங்கள் என்னிடம் கொடுத்த குரங்கை அலுவலகத்தில் என் மேஜையில் கயிற்றில் கட்டி வைத்திருக்கிறேன். அதற்கு தேவையான உணவையும் அருகிலேயே வைத்திருக்கிறேன்'' என்றார்.முதலாளி அவரை கட்டிப்பிடித்து, “இவர்தான் புதிய இயக்குனர். தன் பணியை எப்படி செய்ய வேண்டும் என்பதை நேர்த்தியாக புரிந்து கொண்டவர்” என்றார்.

புறம் பேசுவது, நிறைவாக பணி செய்பவர்களை ஏளனம் செய்வது, அலுவலகத்தில் சிடு சிடுவென இருப்பதை தவிர்த்தால் அலுவலகப் பணியை அமைதியாக நேர்த்தியாக மேற்கொள்ளலாம். உங்கள் பணியாளர் உங்களிடம் “பிளட் பிரஷர் இருக்கான்னு செக் பண்ணுங்க” என்று சொன்னால், நீங்கள் ஒரு டென்ஷன் பார்ட்டி என்பதை அவர் நாசூக்காக சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அலுவலகம், வீடு இரண்டும் தண்டவாளம் போல. இரண்டையும் பேலன்ஸ் செய்து போனால் பயணம் மகிழ்ச்சியாக, நிம்மதியாக, சுகமாகவும் இருக்கும்.
டாக்டர்.ஜெ.ஜெயவெங்கடேஷ், மருத்துவ எழுத்தாளர், மதுரை, 98421 67567

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X