சென்னை: தமிழகத்தில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை திடீரென 147 ரூபாய் உயர்ந்து நேற்று 881 ரூபாய் என்ற விலையில் வினியோகிக்கப்பட்டது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ; வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன. இந்நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப மாதம் தோறும் 1ம் தேதி சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.
இதன்படி தமிழகத்தில் இம்மாதம் வீட்டு சிலிண்டர் விலையில் எவ்வித மாறுதலும் செய்யப்படாமல் ஜனவரியில் இருந்த 734 ரூபாய் என்ற விலை தொடர்ந்தது. நேற்று திடீரென தமிழகத்தில் வீட்டு காஸ் சிலிண்டர் விலை 147 ரூபாய் உயர்த்தப்பட்டு 881 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த விலைக்கு சிலிண்டர் வாங்கியதும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு வழங்கும் மானிய தொகையை எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும். வீட்டு சிலிண்டர் விலை மஹாராஷ்டிராவில் 829.50 ரூபாய்; மேற்கு வங்கத்தில் 896 ரூபாய்; டில்லியில் 858.50 ரூபாயாகவும் உள்ளது.
எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் 'டில்லியில் சட்டசபை தேர்தல் நடந்ததால் நாடு முழுவதும் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தேர்தல் முடிந்ததால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது' என்றார்.
வாடிக்கையாளர்கள் குழப்பம்?
நேற்று முன்தினம் வரை வீட்டு சிலிண்டர் பதிவு செய்தவர்களின் அலைபேசி எண்ணிற்கு டெலிவரியின் போது 734 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளன. நேற்று 881 ரூபாய் செலுத்துமாறு புதிய எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் இரண்டில் எந்த விலையை வழங்க வேண்டும் என தெரியாமல் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE