வெளியேறியது! ஷெட்டர் பழுதானதால் தண்ணீர்...பொதுப்பணித்துறை அலட்சியம்| Dinamalar

தமிழ்நாடு

வெளியேறியது! ஷெட்டர் பழுதானதால் தண்ணீர்...பொதுப்பணித்துறை அலட்சியம்

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (3)
Share
 வெளியேறியது! ஷெட்டர் பழுதானதால் தண்ணீர்...பொதுப்பணித்துறை அலட்சியம்

கடலுார்:பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் உள்ள அணைக்கட்டில் தேக்கிவைத்திருந்த தண்ணீர் முழுவதும், வெளியேறியது.
பருவமழை குறைந்து வருவதால், கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவிரி தண்ணீர் பெற பலபோராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. தண்ணீருக்காக அண்டை மாநிலங்களில் கையேந்தி நிற்காமல், பருவமழையின் போது நமக்கு கிடைக்கின்ற தண்ணீரை சேமித்து வைத்துபயன்படுத்திட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன்படி நீர் நிலைகளை துார் வாரி சீரமைத்து வருவதோடு, புதிய குளங்களை வெட்டி வருகிறது. ஆறுகளில் மழைக்காலத்தில் பெருக்கெடுத்து வரும் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து, சேமித்து வைக்க ஆங்காங்கே படுகை அணை, தடுப்பணை மற்றும் அணைக்கட்டுகள் அமைத்து வருகிறது. மேலும், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி வருகிறது.ஆறுகளில் கட்டியுள்ள தடுப்பணை மற்றும் அணைக்கட்டுகளில் சேமித்து வைக்கும் தண்ணீரால் சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு நல்ல குடிநீர் கிடைத்து வருவது கண்கூடாக தெரிகிறது.இவ்வாறு கடலுார் கெடிலம் ஆற்றில், திருவந்திபுரம் கோவில் பின்னால் உள்ள அணைக்கட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. இதனால், கடந்தாண்டு பருவமழையில் அணைக்கட்டு நிரம்பி கடல் போல் காட்சி தந்தது.திருவந்திபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்று வட்டார கிராம மக்களும் அணைக்கட்டில் தேங்கியுள்ள தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வந்தனர்.
மேலும், இந்த தண்ணீரில் மீன்களும் ஏராளமாக வளர்ந்தன.இந்த அணைக்கட்டில் உள்ள மூன்று ெஷட்டர்களின் கீழ் பகுதியில் வைத்திருந்த சாக்கு மக்கியதால் ஏற்பட்ட ஓட்டை வழியாக கடந்த சில வாரங்களாக தண்ணீர் பீரிட்டு வீணாக வெளியேறி வருகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குபல முறை புகார் செய்தும் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், அணைக்கட்டில் கடல் போல் தேங்கியிருந்த தண்ணீரின் பெரும்பகுதி வெளியேறி தற்போது, கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது.இது குறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தாமோதரனிடம் கேட்டபோது, திருவந்திபுரம் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் பாதுகாப்பாகத்தான் இருந்தது. அணைக்கட்டில் உள்ள மீன்களை பிடிக்க இரவில் சிலர், ெஷட்டர் கீழ் உள்ள சாக்கை கிழித்து ஓட்டை ஏற்படுத்துகின்றனர். தகவல் அறிந்து நாங்களும் ஓட்டையை சாக்கு போன்றவை பயன்படுத்தி தண்ணீர் வெளியேறாமல் அடைத்து வருகிறோம். ஆனால், சிலர் வேண்டும் என்றே, மீண்டும் மீண்டும் இரவில் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர் என 'கேஷூவலாக' பதிலளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X