பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் வயிற்றில் அடிப்பது பெரும் பாவம்: அமைச்சர் கமலக்கண்ணன் வேதனை

Added : பிப் 13, 2020
Advertisement

புதுச்சேரி:'அரசு நெல் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்தி, விவசாயிகளுக்கு கவர்னர் கிரண்பேடி துரோகம் இழைத்துவிட்டார் என, சட்டசபையில் அமைச்சர் கமலகண்ணன் பேசினார்.
புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது:இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, விவசாயிகளிடம் நேரடியாக வாங்கப்படுகிறது. ஆனால், புதுச்சேரியில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் தண்ணீர் பிரச்னையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக நெல் விளைச்சல் ஓரளவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.ஆனால், தனியாரிடம் கிலோ ஒன்றுக்கு ரூ. 3 நஷ்டத்தில் விற்கும் நிலை உள்ளது. எனவே, அரசு சார்பில் காரைக்கால், புதுச்சேரியில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து அரசே நேரடியாக வாங்க வேண்டும் என, முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.அதன்படி, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலமாக தலா ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்து, நெல் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்தது.அதற்காக, காரைக்காலில் உள்ள கூட்டுறவு துறையின் மார்க்கெட்டிங் சொசைட்டிக்கு சொந்தமான இடத்தை, மத்திய அரசின் கெயில் நிறுவனத்திடம் ரூ. 12 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, தலைமை செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் 10க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டது.இதையறிந்த கவர்னர் கிரண்பேடி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கெயில் நிறுவனத்தாரை மிரட்டி, இடம் விற்பனையை தடுத்து நிறுத்தி விட்டார்.அதையடுத்து, பல மாநிலங்களில் நெல்கொள்முதல் செய்துவரும், இந்திய உணவுக் கழகத்தின் தலைவரை எம்.பி., வைத்திலிங்கம் டில்லியில் சந்தித்து பேசினார். அவர் சமீபத்தில் புதுச்சேரி வந்தபோது நானும், முதல்வரும் சந்தித்து பேசினோம். உணவுத்துறை அமைச்சரிடம் பேசி, நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையும் அறிந்த கவர்னர் கிரண்பேடி, மத்திய உணவுக்கழக தலைவரிடம் பேசி தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம் என கூறியதுடன், மத்திய உள்துறையிடம் பேசி, அதையும் நிறுத்திவிட்டார்.
இது தொடர்பாக, கவர்னரிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியும் அவர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதன் மூலம், புதுச்சேரி விவசாயிகளுக்கு கவர்னர் கிரண்பேடி துரோகம் இழைத்துவிட்டார்.புதுச்சேரியில் தான் நினைப்பது மட்டுமே நடக்க வேண்டும், புதுச்சேரி அரசு செயல்படக் கூடாது என்பது அவரது எண்ணம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். அவரது கொள்கைக்கு எதிராக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்பட விடாமல் புதுச்சேரி கவர்னர் தடுக்கிறார்.
ஆண்டுக்கு ரூ. 8,000 கோடிக்கு பட்ஜெட் போடும் புதுச்சேரி அரசால், ரூ. 10 கோடி செலவு செய்து, விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய முடியாதது வேதனையாக உள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகள் எங்கே போய் அழுவார்கள். நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மூன்று மாதமாக முயற்சித்தும் தோல்வியில் முடிந்தது.கவர்னரின் இந்த செயல்பாடுகளை தடுத்து நிறுத்த முதல்வர், அமைச்சர்கள் முயற்சி எடுக்க வேண்டும். விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது பெரும் பாவம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X