நான் எப்போதோ ராஜினாமா செய்திருப்பேன்: அமைச்சர் கந்தசாமி விரக்தி பேச்சு| Dinamalar

'நான் எப்போதோ ராஜினாமா செய்திருப்பேன்': அமைச்சர் கந்தசாமி விரக்தி பேச்சு

Added : பிப் 13, 2020
Share

புதுச்சேரி:'மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாத பதவி எதற்கு என, எப்போதோ ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன்' என, அமைச்சர் கந்தசாமி விரக்தியாக பேசினார்.
புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது:புதுச்சேரி சட்டசபையை கூட்டக்கூடாது, உரிமை இல்லை என, முதல்வருக்கு கவர்னர் கிரண்பேடி கடிதம் எழுதுகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை, சட்டசபையை கூட்டக்கூடாது என, கூறுவதற்கு கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.கவர்னர் தடையால், கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை. அரிசி போட முடியவில்லை. தமிழகத்தில் பொங்கலுக்கு பரிசு பொருட்கள் வழங்கினர். நம்மால் வழங்க முடியவில்லை. துணிகூட கொடுக்க முடியவில்லை. ஒருவரைகூட வேலைக்கு நியமிக்க முடியவில்லை.6 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அந்த பிரச்னையில் ஒன்றுக்கு கூட தீர்வு கிடைக்கவில்லை. புதுச்சேரியில் மூடிக் கிடக்கும் மில்கள், சர்க்கரை ஆலைகளை இயக்க நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக நிதி பெற்றுத்தர கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அரசு சார்பு நிறுவனங்களில் 10 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட துறைகளில் 75 சதவீதம் எனது கட்டுப்பாட்டில் உள்ளது. என்னால் மக்களுக்கு பதில் கூற முடியவில்லை. இதே நிலை நீடித்தால் அடுத்த தேர்தலில் மக்களை நாம் சந்திக்க முடியாது.நமக்கு எந்த உரிமையும் இல்லை, அதிகாரம் இல்லை என்றால், சட்டசபை தேவையில்லை. அதிகாரம் இல்லாமல் பதவியில் இருந்து என்ன பயன், நான் எப்போதோ ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன்.கடந்த 4 ஆண்டுகளில் ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கைகள், கவர்னரின் தடை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை. அதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும். நான் இரண்டு மாதத்தில் சோனியாவை சந்தித்து, என்னை எம்.எல்.ஏ. ஆக்கினீர்கள், அமைச்சர் பதவி கொடுத்தீர்கள் ஆனால், எந்த பணியும் செய்ய முடியவில்லை என தெரிவிப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X