கந்து வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை: எஸ்.பி., ஜெயக்குமார் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கந்து வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை: எஸ்.பி., ஜெயக்குமார் எச்சரிக்கை

Added : பிப் 13, 2020
Share

விழுப்புரம்:மாவட்டத்தில் கந்து வட்டிக்கு பணம் வசூல் செய்பவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:கந்துவட்டி கொடுமையால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. உள்ளூர் முதலாளிகள், கடுமையான வட்டியுடன் சம்மந்தபட்டவர்களிடம் பணம் வசூல் செய்வதாக தகவல்கள் உள்ளன.இதனை வசூலிக்க மிரட்டல், அடியாட்கள் என தில்லு முல்லு வேலைகளில் முதலாளிகள் ஈடுபடுகின்றனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாதோர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இத்தகைய அதிக வட்டி வசூலிக்கும் தனியாரிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக 2003ம் ஆண்டு தமிழக அரசு 'தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடைச் சட்டம் 2003' என்ற சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் மக்களிடமிருந்து அதிக வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.அதிக வட்டி வசூல் செய்பவர்கள் தங்களிடம் பணம் பெற்றவர்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அவர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கைப்பற்றியிருந்தால், அதனை மீட்டு அவர்களிடமே ஒப்படைக்கச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதுபோன்று, அதிக வட்டி வசூல் செய்பவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற பல அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.எனவே, கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எந்தவிதமான அச்சத்திற்கும் ஆளாகாமல், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை அணுகி, தக்க நிவாரணம் பெறலாம். மேலும், அதிக கந்து வட்டியில் பணம் வசூல் செய்பவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X