ஜபல்பூர்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின் நடந்த கலவரம் சம்பந்தமான வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஏழு குற்றவாளிகள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நர்மதா நதிக்கரையில் நடைபெறும் கும்பமேளாவில் சமூக சேவையாற்ற உள்ளனர்.
குஜராத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தின் ஒடே நகரில் நடந்த கலவரத்தில் ௨௩ பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ௧௫ பேருக்கு குஜராத் மாநிலத்திற்கு வெளியே தங்கியிருப்பதுடன் மத்திய பிரதேசத்தின் இந்துார் மற்றும் ஜபல்பூரில் சமூக சேவையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் ஜாமின் வழங்கியது.
ஜாமின் பெற்றவர்களில் ஏழு பேர் நேற்று முன்தினம் ஜபல்பூருக்கும் ஆறு பேர் இந்துாருக்கும் வந்தனர்.

இதுகுறித்து ம.பி. மாநில சட்ட உதவி ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கிரிபாலா சிங் கூறியதாவது:உச்சநீதிமன்ற உத்தரவின்படி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிந்தைய கலவர வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஏழு பேர் ஜபல்பூர் வந்துள்ளனர்.
இங்கு குவாரிகாட்டிலிருக்கும் நர்மதா நதிக்கரையோரம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நர்மதா கும்பமேளா நடைபெறும். பிப். 24 முதல் மார்ச் 3 ம் தேதி வரை நடக்கும் இந்த கும்பமேளாவில் அவர்கள் பக்தர்களுக்கு தொண்டு செய்வதுடன் தியான பயிற்சி மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள்.கும்பமேளா தவிர முதியோர் இல்லங்களில் சேவை செய்வதுடன் மருத்துவமனைகளில் அனாதையாக உள்ள நோயாளிகளையும் கவனிப்பார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் யார் என மற்றவர்களுக்கு தெரியாமல் கண்காணிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.