அட்டகாசம்: சிவகங்கையில் கந்து வட்டி கும்பல்;சிக்கி தவிக்கும் அரசு ஊழியர்கள், பெண்கள்| Dinamalar

தமிழ்நாடு

அட்டகாசம்: சிவகங்கையில் கந்து வட்டி கும்பல்;சிக்கி தவிக்கும் அரசு ஊழியர்கள், பெண்கள்

Added : பிப் 13, 2020
Share

சிவகங்கை:சிவகங்கையில் கந்துவட்டி கும்பலிடம் சிக்கி அரசு ஊழியர்கள், அப்பாவி பெண்கள் உள்ளிட்டோர் தவித்து வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை காரணமாக வெளியூர்களில் இருந்து வந்து பணிபுரிந்த பலர் இங்கேயே தங்கி வருகின்றனர். இவர்களின் பொருளாதார சுமைகளை சாதகமாக்கிக்கொண்ட கந்துவட்டி கும்பல் வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களை ஆட்டிப் படைத்து வருகிறது. 10 ஆயிரம் ரூபாய் வாங்கினால் அசலை திருப்பித்தரும் வரை வாரந்தோறும் ஆயிரம் ரூபாய் வட்டி கட்ட வேண்டும். வட்டி கட்ட தவறிவிட்டால் வட்டியும் அசலும் சேர்ந்து லட்சத்தை தாண்டி, வீடு மற்றும் உடைமைகளை பறித்துவிடும்.

தற்போதும் பலர் வட்டி கட்டமுடியாமலும், வெளியே சொல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தாலும் கந்துவட்டி கும்பலை மீறி அங்கு எதுவும் நடப்பதில்லை.பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனை அணுகி புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியதாவது: கணவரின் இருதய ஆப்பரேஷன் செலவுக்கு மூன்று தவணைகளில் மொத்தம் 50 ஆயிரம் வாங்கினேன். வாரம் 5 ஆயிரம் வட்டியாக பத்து மாதம் கொடுத்தேன். தற்போது வட்டி கட்ட முடியவில்லை. வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு 3 லட்சம் கேட்கிறார்கள். கொடுக்கவில்லை என்றால் மானபங்கம் செய்வதாக என்னை மிரட்டுகிறார்கள் என்று கண்ணீர் மல்க கூறினார்.

சிவகங்கையை சேர்ந்த மற்றொரு அரசு பெண் ஊழியர் ஒருவர் கூறியதாவது: வெறும் 10 ஆயிரம் ரூபாய் தான் வாங்கினேன். வாரம் ஆயிரம் ரூபாய் வட்டி கட்டினேன். கொடுக்க முடியாத நாட்களில் அவர்களே அந்த பணத்தை அசலில் சேர்த்து தற்போது ஒரு லட்ச ரூபாய் வந்துவிட்டது. வாரம் 10 ஆயிரம் வட்டி கட்டவேண்டும் என கூறுகின்றனர். எனக்கு சம்பளமே மாதம் 7 ஆயிரம்தான் வருகிறது. குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை, என்றார்.

சில வாரங்களுக்கு முன்பு கந்துவட்டிக்கும்பலின் கொடுமை தாங்காமல் பெண் ஒருவர் துாக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை நகர் முழுவதும் இது போல் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கந்துவட்டி குமபலிடம் சிக்கியுள்ளதாக தெரிகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கந்துவட்டி கும்பல் இங்கேயே முகாமிட்டு கந்துவட்டி தொழிலை நடத்திவருகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது புகார் செய்கின்றனர். புகார்களும் பூசி மெழுகப்பட்டு தான் வருகிறது. கந்துவட்டியை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடைச்சட்டம் என்ன ஆனது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X