புதுடில்லி: கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிராக நிர்பயா குற்றவாளி வினய்சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, 'நிர்பயா' 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார், பவன் குப்தா, வினய், அக் ஷய் ஆகியோருக்கு, துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.டில்லி திஹார் சிறையில், இவர்களுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற இரண்டு முறை, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டும், சட்ட சிக்கல் காரணமாக தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. மறுசீராய்வு மனு, கருணை மனு என, குற்றவாளிகள், மாறி மாறி மனு தாக்கல் செய்வதால், தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தள்ளுபடி
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய்சர்மா, தனது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையைாக குறைக்கக்கோரி ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்திருந்தார். இதனை ஜனாதிபதி நிராகரித்துவிட்டார். இதனை எதிர்த்து வினய்குமார், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கெடு
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கில் போட அனுமதி மறுத்த டில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் பதில் அளிக்க கூடுதல் அவகாசம் கேட்டு நிர்பயா குற்றவாளிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நாளை பிற்பகல் 2 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இன்று விசாரணை
இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்ற கோரி, நிர்பயாவின் பெற்றோர் மற்றும் டில்லி அரசு சார்பில் டில்லி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தர்மேந்திரா ரானா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது, குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா சார்பில். புதிய வழக்கறிஞரை நியமிக்க, கால அவகாசம் தேவை' என, கூறப்பட்டதால் இம்மனு மீது இன்று. விசாரணை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE