திண்டிவனத்தில் திறக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு பயன்பாட்டிற்கு வரவில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் திறக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு பயன்பாட்டிற்கு வரவில்லை

Added : பிப் 13, 2020
Share
 திண்டிவனத்தில் திறக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு பயன்பாட்டிற்கு வரவில்லை

திண்டிவனம்:திண்டிவனம் அரசு மருத்துவமனையில், புதியதாக திறக்கப்பட்டுள்ள, விரிவான அவசர சிகிச்சை பிரிவை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான அவசர சிகிச்சை பிரிவு மற்றும் 60 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கண் அறுவை சிகிச்சை மையத்தை, கடந்த 30ம் தேதி முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.புதியதாக திறக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பகுதியில், எலும்பு முறிவு சிகிச்சை, விபத்து கால அவசர சிகிச்சை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் படுக்கை வசதியுடன் கூடிய, விரிவான அவசர சிகிச்சை பிரிவு, திறப்பு விழா நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும், பயன்பாட்டிற்கு வரவில்லை.ஏற்கனவே உள்ள பழைய அவசர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை அளிக்கப்படுகின்றது. கூடுதல் வசதியுடன் திறக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பகுதியில், படுக்கை வசதி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு பிறகு புதிய கட்டடம் பூட்டிக் கிடக்கிறது.திண்டிவனம் அரசு மருத்துவமனையில், ஏற்கனவே டாக்டர்கள் பற்றாக்குறை, சுகாதாரத்துறை பணியாளர்கள் பற்றாக்குறை நீடித்து வந்த நிலையில், புதியதாக திறக்கப்பட்டுள்ள விரிவான அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.இதேபோன்று, மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவிற்கான டாக்டர்கள், ஆண் செவிலியர்கள் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் வகையில், முதல்வரால் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ள விரிவான அவசர சிகிச்சை பகுதிக்கு தேவையான டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை நியமித்து, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X