இந்த செய்தியை கேட்க
சென்னை : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.,யின் நடவடிக்கையை பார்த்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சிரிக்கின்றனர்.
தமிழகத்தில், 5,300 கி.மீ.,க்கு மேல், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணிக்கும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிப்பதற்காக, 46 இடங்களில், சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.
பராமரிப்பு

மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால், சென்னை, ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவை அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி செல்லும் வாகனங்கள், பயணியர், இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம், பெருங்குடி, ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், உத்தண்டி உள்ளிட்ட, ஐநது இடங்களில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால், சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சாலை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிக்கு, இந்த நிதியை, மாநில நெடுஞ்சாலைத் துறை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தென்சென்னை, தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், நேற்று முன்தினம், டில்லியில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். 'சென்னை மாநகராட்சி எல்லைக்குள், இந்த ஐந்து சுங்கச்சாவடிகளும் வருகின்றன. சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு, 30 நிமிடங்களுக்கு மேல், வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
'இதனால், சாலையை எளிதாக கடக்கும் பயணியரின் நோக்கம் வீணடிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதிகாரிகள் சிரிப்பு
இத்தகவல், டில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் வாயிலாக, தமிழக பிரிவு அதிகாரிகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. தமிழச்சி கோரிக்கையை கேள்விப்பட்டு, அதிகாரிகள் சிரித்துள்ளனர்.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தென்சென்னை எம்.பி., கோரிக்கை வைத்துள்ள சுங்கச்சாவடிகள், மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றால், தமிழக அரசிடமும், துறையின் அமைச்சர் என்ற முறையில், முதல்வர் இ.பி.எஸ்.,சிடமும் தான் முறையிட வேண்டும்.தமிழச்சி, அதிகம் படித்தவர். எந்த சாலை, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றுகூட தெரியாமல், மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளது, வேடிக்கையாக உள்ளது.இந்த கட்டண சாலைகள் அனைத்தும், தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்டவை என்பதை, அவர் உணர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE