கோரிக்கை! மணலூர்பேட்டையை தனி ஒன்றியமாக அறிவிக்க...கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றோர் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கை! மணலூர்பேட்டையை தனி ஒன்றியமாக அறிவிக்க...கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றோர் வலியுறுத்தல்

Added : பிப் 13, 2020
Share
 கோரிக்கை!  மணலூர்பேட்டையை தனி ஒன்றியமாக அறிவிக்க...கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றோர் வலியுறுத்தல்

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய ஆட்சி எல்லை மாற்றங்கள் தொடர்பான, இரண்டாவது பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண் குராலா ஆகியோர் தலைமை தாங்கினர். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, மஸ்தான், மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர்.சரவணன், இந்திய கம்யூ., மாவட்ட செயலர்: கொடியூர், டி.குன்னத்துார், வீரணாம்பட்டு ஆகிய கிராமங்களை 100 கி.மீ., துாரத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்துள்ளனர். இந்த கிராமங்களை திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியத்தில் சேர்த்து விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும். மணலுார்பேட்டையை தனி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும்' என்றார்.பொன்முடி எம்.எல்.ஏ.,:மணலுார்பேட்டை பகுதியில் உள்ள 25 கிராமங்களை ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் இணைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மணலுார்பேட்டையை ஒன்றியமாக அறிவிக்க வேண்டும். தொகுதி வாரியாக பிரிக்காமல், ஊராட்சி வாரியாக பிரிக்க வேண்டும்.எடப்பாளையம் ஊராட்சியை வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும். விக்கிரவாண்டி தாலுகாவில் உள்ள கடையம், கருவாட்சி உள்ளிட்ட 6 ஊராட்சிகளை கண்டாச்சிபுரம் தாலுகாவில் இணைக்க வேண்டும்.
இதேபோன்று, கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சியினர், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மணலுார்பேட்டையை தனி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மஸ்தான் எம்.எல்.ஏ.,:செஞ்சி ஒன்றியத்தில் இருந்து சில கிராமங்களைப் பிரித்து, ஆலம்பூண்டியை தனி ஒன்றியமாக உருவாக்க வேண்டும். மேல்மலையனுார் ஒன்றியத்தில் இருந்து சில கிராமங்களை பிரித்து வளத்தியை தனி ஒன்றியமாக உருவாக்க வேண்டும்
மாசிலாமணி எம்.எல்.ஏ.,:மயிலம் தொகுதியில் உள்ள நெடி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். பெலாக்குப்பம் ஊராட்சியில் இருந்து பிரித்து வேம்பூண்டி, முட்டியூர் கிராமங்களை இணைத்தும், எடப்பாளையம் கிராமம் ஆகியவற்றை தனி ஊராட்சி அறிவிக்க வேண்டும்.திடீர் சலசலப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் ஊராட்சி ஒன்றியம், சிறுத்தனுார் ஊாட்சிக்குட்பட்ட கருவேப்பிலைபாளையம் குக்கிராம பகுதியையும், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் ஊராட்சி, காந்தலவாடி ஊராட்சிக்குட்பட்ட கருவேப்பிலைபாளையம் குக்கிராம பகுதியை ஒருங்கிணைத்து கருவேப்பிலைபாளையம் என்ற புதிய கிராம ஊராட்சியை உருவாக்கி, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் ஊராட்சி ஒன்றியத்தோடு இணைத்தல் தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் மாலையில் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., ஞானமூர்த்தி: கருவேப்பிலைபாளையம் தனி ஊராட்சியாக அறிவித்தது வரவேற்கத்தக்கது. ஆனால், விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்காமல், கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இந்த ஊராட்சியை இணைக்க வேண்டும்.
சுரேஷ், சமூக ஆர்வலர்:கருவேப்பிலைபாளையம் என்ற ஊராட்சி, மக்களின் மனநிலையை கேட்டு அரசு அறிவித்து, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைத்துள்ளது. எங்கள் ஊராட்சியை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க விருப்பம் இல்லை. கருவேப்பிலைபாளையம் விழுப்புரத்திற்கு 15 கி.மீ., துாரத்திலும், கள்ளக்குறிச்சிக்கு 100 கி.மீ., துாரத்திலும் உள்ளது. இதனால், விழுப்புரம் மாவட்டத்துடன் இருந்தால் அரசு திட்டங்களை நாங்கள் எளிதில் பெற முடியும்.அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ., ஞானமூர்த்தி தரப்பினர் மற்றும் சுரேஷ் தரப்பினர் அதிகாரிகள் முன்னிலையில் ஒருவருக்கு ஒருவர் ஆவேசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அண்ணாதுரை: பொதுமக்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதனடிப்படையில், ஊராட்சி ஒன்றிய ஆட்சி எல்லை மற்றும் ஊராட்சி எல்லைகள் அறிவிப்பு வெளியிடப்படும்.மாவட்ட திட்ட இயக்குநர் மகேந்திரன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் புகழேந்தி, காங்., மாவட்ட தலைவர் ரமேஷ் உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X