பொது செய்தி

தமிழ்நாடு

பழந்தமிழ் இசைக்கருவிகளை மீட்பதே என் லட்சியம்: ஆர்வமாக சேகரிக்கிறார், 'கோசை நகரான்'

Added : பிப் 13, 2020
Advertisement
பழந்தமிழ் இசைக்கருவிகளை  மீட்பதே என் லட்சியம்: ஆர்வமாக சேகரிக்கிறார், 'கோசை நகரான்'

பழந்தமிழ் இசைக்கருவிகளை, 'கோசை நகரான் வாத்தியக் குழு' என்ற பெயரில் காட்சிப்படுத்தியும், பயன்படுத்தியும் வருகிறார், கோயம்பேடைச் சேர்ந்த சிவகுமார், 32, அவரை சந்தித்து பேசியதிலிருந்து...'கோசை நகரான்' பெயர் வித்தியாசமாக உள்ளதே?'கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு, வேசமுரு காவமரர் பெருமாளே' என, கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் கோவிலில் இருக்கும் முருகனை, திருப்புகழில் பாடியுள்ளார், அருணகிரிநாதர். அதாவது, இன்றைய கோயம்பேடு தான், அன்றைய கோசை நகரம். பழந்தமிழ் இசைக்கருவிகளை மீட்டெடுப்பதால், எங்கள் ஊரின் பழமையான பெயரையே வைத்துள்ளேன். இப்போது, என்னை, கோசை நகரான் என்றால் தான், பலருக்கும் தெரிகிறது.


இசைக்கருவிகளை மீட்டெடுக்கும் முயற்சி எப்படி துவங்கியது?சில ஆண்டுகளுக்கு முன், திருவாரூரில் உள்ள, தியாகராஜர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு இசைக்கப்பட்ட இசை, வேறெங்கும் கேட்காததாக இருந்தது. அதில் ஈர்க்கப்பட்ட நான், சட்டையைக் கழற்றிவிட்டு, விபூதி பூசி, ஆடி இருக்கிறேன். பின், அந்த, 'வீடியோ'வை பார்த்த பின், தெய்வீக சக்தி வாய்ந்த அந்த இசையைத் தேடி அலைந்தேன். பின், வாத்தியங்களை வாசிக்க கற்றேன். தற்போது, அக்கருவிகளை சேகரித்து வருகிறேன்.


பழந்தமிழர் இசைக்கருவிகளை, எப்படி அறிவது?பழந்தமிழகத்தில், போர், திருவிழா என, எல்லாவற்றிலும் இசை முழங்கி இருக்கிறது. தமிழர்களின் வாழ்வு துவங்குவதே, இசையிலிருந்து தான். முன்பு, குழந்தை பிறந்ததும், சங்கில் தான் பால் புகட்டுவர். அப்போது, சங்கொலி எழுப்புவர். பின், வாழ்வின் திருப்புமுனையான, திருமணத்திலும், சங்கு இசை முழங்கினர். இறுதியாக, மனிதன், மரிக்கும் போது, சங்கொலி எழுப்புவர். இதைக், 'கடைச்சங்கம்' என்பர். இப்போது, கடைச்சங்கம் தான் இருக்கிறது.சங்கொலி, மங்கல ஒலியாக இருந்தது. இடதுகையில் வைத்து வாசிக்கும் சங்கை, இடம்புரி என்றும், வலதுகையில் வாசிக்கும் சங்கை, வலம்புரி என்றும் அழைத்தனர். வலம்புரி சங்குகள், நம் கடல்பகுதியில் மட்டும் கிடைப்பவை. அவற்றுக்கு காந்த சக்தியும், ஆன்மிக சக்தியும் அதிகம். அவற்றை ஊதும் போது, மனதை ஒருநிலைப்படுத்தும், 'ஓம்' என்ற நாதம் ஒலிப்பதைக் கேட்கலாம்.பொதுவாக, 'திரு' எனத் துவங்கும் ஊர்களில் எல்லாம், பிரதானமான சிவன் கோவில்கள் இருக்கும். அங்கெல்லாம், தமிழ் இசைக்கருவிகள் முழங்கி இருக்கின்றன. தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்டவற்றில், திருவிழாக்களில் இசைக்கப்பட்ட வாத்தியக் கருவிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அப்போது, 100க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் இருந்தன.சோழர் காலத்துக்கு பின், பக்தியிலும், போர்களிலும் தொய்வு ஏற்பட்டதால், இசைக்கலைஞர்கள் வேறு பணிக்கு சென்றனர். இசைக்கருவிகள் மறைந்தும், மருவியும் போயின.


இலக்கியங்களில் உள்ள இசைக்கருவிகள் எவை?


'துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம் உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச் சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதம் துந்துபி தாளம்வீணை மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங் குடமுழா மொந்தை வாசித் தத்தனை விரவினோ டாடும் எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே' என, காரைக்கால் அம்மையார், 11ம் திருமுறையில், அப்போதைய இசைக்கருவிகளை பற்றி எழுதியுள்ளார்.கொக்கரை, எக்காளம், தவண்டை, நகரா என, பல இசைக்கருவிகள் இருந்தன. புறநானுாறில், சிறுபறை எனப்படும் உடும்புத் தோலில் செய்யப்பட்ட வாத்தியக் கருவி, தற்போது, கஞ்சிரா என, மாறியுள்ளது. துத்தேரி என்ற வெண்கல இசைக்கருவி, 'டிரம்பெட்' என்னும் பெயரில் உள்ளது. ஆரணை என்ற திருச்சின்னம் தான், வாகனங்களின் 'ஹாரன்'களுக்கு முன்னோடி. பலகை என்ற இசைக்கருவி தான், இப்போதைய, பேஸ் என்னும் தாளக்கருவி. சிவனின் கையில் உள்ள, கொப்பறை, உடுக்கை உள்ளிட்ட எண்ணற்ற இசைக்கருவிகள், உரிய முக்கியத்துவம் இல்லாமல் மங்கிக் கிடக்கின்றன.


தமிழர்களின் இசைக்கருவிகள் எதன் அடிப்படையிலானவை?தோல், துளை, கம்பி, கஞ்சகக் கருவி என, நான்கு வகைகளில், இசைக்கருவிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு, தோல், மரம், மூங்கில், நரம்பு, வெண்கலம், பித்தளை உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. மாட்டுக் கொம்பிலிருந்து தயாரிக்கப்பட்ட, கொம்புத்துாரை, கொக்கரை உள்ளிட்டவை, கோவில் விழாக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சேமக்கலம் எனும், வெண்கல வட்டில், கோவில் மணியோசையாகவும், நடனத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருபுறங்களிலும், தோல் போர்த்தப்பட்டு, இடை சிறுத்து காணப்படும் துடி, உடுக்கையின் இன்னொரு வகை. இப்படியாக, ஒவ்வொரு இசைக்கருவியும், ஒவ்வொரு விசேஷத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.


உங்களின் நோக்கம்?தற்போது பள்ளி, கல்லுாரிகள், விழாக்களில் இவற்றை காட்சிப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். தமிழர்களின் திருமணம், திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களிலும், பழந்தமிழ் இசைக்கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்பது தான் என் நோக்கம். என்னிடம் உள்ள, பழந்தமிழ் இசைக்கருவிகளை, கோயம்பேடு, மேற்கு மாட வீதியில் காட்சிப்படுத்தி உள்ளேன். அதேபோல், பழந்தமிழ் இசைக்கருவிகள் வைத்துள்ளோரும், காட்சியகத்துக்கு கொடுத்து உதவலாம்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X