சேலத்தில் செயல்படாத 1,200 சிசிடிவி கேமராக்கள்: கொள்ளையை தடுப்பதில் போலீசாருக்கு பெரும் சிக்கல்| Dinamalar

தமிழ்நாடு

சேலத்தில் செயல்படாத 1,200 'சிசிடிவி' கேமராக்கள்: கொள்ளையை தடுப்பதில் போலீசாருக்கு பெரும் சிக்கல்

Added : பிப் 13, 2020
Share

சேலத்தில், 1,200 கேமராக்கள் செயல்படாததால், கொள்ளையை தடுப்பதில், பெரும் சிக்கல் உள்ளது. அதனால், செயல்படாத கேமராக்களை சீரமைத்து, பல்வேறு இடங்களில், புது கேமராக்கள் பொருத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றங்களை தடுக்க, கொள்ளையர்களை அடையாளம் காண்பதில், போலீசுக்கு உதவியாக, 'மூன்றாம் கண்' எனும், 'சிசிடிவி' கேமராக்களே உள்ளன. தமிழக அரசின் நிதியுதவி, தனியார் பங்களிப்புடன், பொது இடங்களில், கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. போலீசின் நவீனமயமாக்கல் பிரிவு தகவலின்படி, சென்னையில், 1.35 லட்சம் கேமராக்கள் செயல்படும் நிலையில், பிற நகரங்களில், அதில், 15 சதவீதத்துக்கும் குறைவாகவே, கேமராக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, சேலம் மாநகர போலீசின், தெற்கு, வடக்கு, மேற்கு சரக, 14 போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அரசு, தனியார் சார்பில், 16 ஆயிரத்து, 751 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், பாலப்பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 1,200 கேமராக்கள் செயல்படவில்லை. குறிப்பாக, ஐந்து ரோட்டில் தொடங்கி, அண்ணா பூங்கா வரையான சாலையில், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கேமராக்கள், பால பணிக்கு அகற்றப்பட்டு, கண்காணிப்பு இல்லாத பகுதியாக உள்ளன. ஏ.வி.ஆர்., ரவுண்டானாவில் தொடங்கி, சாரதா கல்லூரி சாலையில், எல்.ஆர்.என்., ஓட்டல் வரை, பாலப்பணி முடிந்து, செயல்பாட்டுக்கு வந்தும், எந்த இடத்திலும் கேமராக்கள் இல்லை. பழைய பஸ் ஸ்டாண்டில், தற்போது பணி நடந்து வருவதால், அங்கும், அருணாசல ஆசாரி தெருவிலும், கேமராக்கள் இல்லை. அதேபோல், சேலம் மாநகரின் பல பகுதிகள், முக்கிய சாலை சந்திப்புகளில் கேமராக்கள் இல்லை. குறைந்தளவிலுள்ள கேமராக்களும், பல்வேறு இடங்களில் பழுதாகியுள்ளன. இதுதவிர, கேமராக்களில் காகம், பருந்து போன்ற பறவைகள் அமர்ந்தால் கூட, அதன் திசை மாறி, கண்காணிப்பில் தொய்வு ஏற்படுகிறது. இதனால், கேமரா பழுதாகியுள்ள இடங்கள், கேமரா பொருத்தப்படாத பகுதிகளை தேர்வு செய்து, மர்ம நபர்கள், கொள்ளை, திருட்டில் ஈடுபடுகின்றனர். சேலத்தில், சமீபத்தில், பிரபல நகைக்கடை, அரசு ஊழியர்களின் வீடு உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த சம்பவங்களில், கொள்ளையர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் தவிக்கின்றனர்.

இதுகுறித்து, சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் கூறியதாவது: பொது இடங்களில் பழுதாகியுள்ள கேமராக்களை சரிசெய்து அறிக்கையளிக்க, அந்தந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டு, கேமரா செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய, ரோந்து போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசார், 24 மணி நேர பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கு துணையாக கேமராக்கள் அமைவதால், மக்கள், தங்கள் நகை, பணம், பொருட்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய, வீடுகள், தெருக்களில் கேமரா அமைக்க, முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கேமரா இருப்பது தெரிந்தாலே, கொள்ளையர் வர தயங்குவர். அதேபோல், கேமரா பொருத்தியுள்ளவர்கள், அதன் செயல்பாட்டை, மாதம் ஒருமுறை ஆய்வு செய்து, பழுது இருந்தால் சரிசெய்து இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் மனசு வைப்பாரா? 'சென்னை மாநகரம் முழுவதுமாக, 'சிசிடிவி' கேமரா பொருத்துவதற்கு நான் காரணமல்ல; தமிழக முதல்வர் பழனிசாமி தான் காரணம்' என, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், சமீபத்தில் நடந்த விழாவில் பேசினார். இது வெறும் வார்த்தையில்லை; உண்மைதான். சென்னை மாநகரம் முழுவதும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி, நகரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து வருகின்றனர். இதனால், சென்னையில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போன்ற நிலையை, தமிழகம் முழுவதும் செய்ய முடியும். குறிப்பாக, முதல்வரின் சொந்த மாவட்டத்தில், சேலம் மாநகரில் அதிகரித்துவரும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த, அனைத்து பகுதிகளிலும், 'சிசிடிவி' கேமரா பொருத்த, முதல்வர் உத்தரவிட வேண்டும். மேலும், போலீஸ் துறைக்கு, அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். அதாவது, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள முக்கிய வீதிகள், அனைத்து தெருக்களிலும், கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும். அதற்காக, ஸ்டேஷனில் கட்டமைப்பை உருவாக்க, நிதி ஒதுக்க வேண்டும். சேலத்தில் போலீசாருக்கு உதவ, ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் தயாராகவுள்ளன. அதற்கான தெளிவான வழிமுறை இல்லாததால் மவுனம் காக்கின்றனர். மாநகர போலீசார், சமூக அக்கறை உள்ளவர்களை அணுகினால், சேலம் மாநகரம் முழுவதும், 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி, குற்றங்களை தடுக்க முடியும்.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X