தமிழ்நாடு

581 பேரை மீட்டு காப்பகங்களில் ஒப்படைத்த மாமனிதர்: சேவைக்காக சமூக நலத்துறை அடையாள அட்டை வழங்கி அங்கீகாரம்

Added : பிப் 13, 2020
Advertisement

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த ஏ.சொக்கலிங்கம்,50; இதுவரை, 581 ஆதரவற்றவர்களை மீட்டு, காப்பகங்களில் சேர்த்துள்ளார். அவரை சமூக நலத்துறை கவுரவிக்கும் வகையில், அடையாள அட்டை வழங்கி உள்ளது.
குக்கிராமங்கள் தவிர, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில், ஆதரவற்றோர், குடும்பத்தார் இருந்தும் கைவிடப்பட்டோர், பிற மாநிலத்தவர், மன நிலை பாதித்தோர், முதியோர், நிரந்தர நோய் பாதித்தோர் என, பலரும் வீதிகளில் வாழ்கின்றனர். அவர்களுக்கு சுகாதாரப்பணிகளை, சில அமைப்புகள் செய்து உதவினாலும், சில நாட்களில் மீண்டும், அழுக்கு படிந்து, தாடி, கிழிந்த ஆடை என்ற அடையாளத்துக்கு மாறுகின்றனர். மூன்று நேர பசியை போக்க, பல நிலைகளில் போராடும் இவர்களை மீட்பதை, கடமையாக கொண்டு செயல்படுகிறார், ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே மேலப்பாளையம், கல்வி நகரை சேர்ந்த ஏ.சொக்கலிங்கம். தாயார், மனைவி, குழந்தைகள் இருந்தாலும், 25 ஆண்டாக, ஆதரவற்றோர், முதியோர்களை மீட்டு, காப்பகங்களில் ஒப்படைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரே பார்த்தாலும், மற்றவர்கள் கூறினாலும், ஆதரவற்றவர்கள், மனநிலை பாதித்தோர் இருக்கும் இடம் தேடி சென்று, அவர்களை மீட்டு, திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, வாணியம்பாடி, ஆம்பூர், சத்தியமங்கலம், விழுப்புரம், ஒசூர், தர்மபுரி, கோவை போன்ற இடங்களில் உள்ள கருணை இல்லம், முதியோர் இல்லங்களில் சேர்க்கிறார். துவக்கத்தில் சிரமத்தை சந்தித்தாலும், இவரது சேவையை உணர்ந்து முதியவர், ஆதரவற்றவரை மீட்ட பகுதிக்கான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், இவருக்கு கடிதம் தருகின்றனர். பல பண்பாளர்கள், காப்பகத்துக்கு கொண்டு செல்லும் செலவை ஏற்கின்றனர். சில வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள், குறைந்த கட்டணத்தில், இவர்களை சேர்க்க உதவுகின்றனர்.

ஆரம்பத்தில், ஈரோடு முன்னாள் கலெக்டர்கள் சண்முகம், பிரபாகர் ஆகியோர், இவருக்கு கடிதம் வழங்கி ஒத்துழைத்தனர். பலரும், உடை, அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினர். உரியவரை காப்பகத்தில் ஒப்படைத்து, அவர்களது படத்துடன், ஒப்படைத்தமைக்கான கடிதம் பெற்று, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலும், இவரே பதிவு செய்வார். கடந்த, 25ல், பொன்னம்மாள் என்ற முதியவரை, 581வது நபராக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட அனைவரது போட்டோ, போலீசார் மற்றும் காப்பகம் வழங்கிய கடிதங்களை பாதுகாத்து வருகிறார். போலீஸ், செக்போஸ்ட், காப்பகங்கள், பொதுமக்கள், வசதியானவர்கள் என அனைவரும் ஒத்துழைப்பதால், சாலைகளில் முதியவர்கள், நோயாளிகள், மனநிலை பாதித்தோர், ஆதரவற்றவர்கள் தயங்கி தயங்கி நிற்பது, தூங்குவது குறைந்து வருகிறது. இதை உறுதி செய்த, ஈரோடு முன்னாள் கலெக்டர் பிரபாகர், சமூக நலத்துறை மூலம், இவருக்கு அடையாள அட்டை வழங்கினார். அந்த அட்டையில், இவரது போட்டோ, விலாசம், ஆதார் எண்ணுடன், இவரது சேவையை, 'கைவிடப்பட்டவர்களை காப்பகங்களில் சேர்த்தல்' எனக்குறிப்பிட்டு, மூன்று ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக வழங்கினார். அடுத்தடுத்த மூன்றாண்டுகளில் அதை புதுப்பித்து வழங்கவும், கடிதம் கொடுத்துள்ளார்.

இதுபற்றி, சொக்கலிங்கம் கூறியதாவது: துவக்கத்தில் என் குடும்பத்தில் கூட எதிர்ப்பு இருந்தது. பின்னர், என்னை புரிந்து கொண்டனர். இதை முழு நேர பணியாக செய்கிறேன். என்னை போன்ற சிலர், இச்சேவையில் ஈடுபட்டாலும், பலருக்கும், இதுபோன்ற சேவையில் ஈடுபட ஆசை உள்ளது. அவர்களால் நேரடியாக ஈடுபட முடியாத நிலையில், நான் கேட்கும் உதவியை செய்து தருகின்றனர். 'ஆதரவற்றவர்கள் இருக்கிறார்கள்; அவர்களை எங்காவது சேருங்கள்' என, வரும் அழைப்பைவிட கூடுதலாக, 'அடுத்த முறை, யாரையாவது காப்பகத்தில் சேர்த்தால், அதற்கான முழு உதவியையும் நான் செய்கிறேன்' என்ற அழைப்பு அதிகமாக வருகிறது. ஆதரவற்றவர்களை பார்த்தால் வருத்தமாக இருந்தாலும், நான் உதவுகிறேன் என அழைப்பவர்களை பார்த்தால், உற்சாகமாக இப்பணியை செய்ய துண்டுகிறது. வாழ்நாள் முழுவதும் இப்பணியை தொடர திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு கூறினார். இவரை பாராட்ட, 94863 07484 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X