பெண்ணை சீரழித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடிப்பு| Dinamalar

பெண்ணை சீரழித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடிப்பு

Added : பிப் 13, 2020
Share

பிரோசாபாத்; உத்தர பிரதேசத்தில், இளம்பெண்ணை பலாத்காரம் செய்து, அவரின் தந்தையை சுட்டுக்கொன்ற நபர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரோசாபாதில் உள்ள திலக் நகர் பகுதியில், ஆறு மாதங்களுக்கு முன், இளம் பெண் ஒருவரை, அச்சமான் உபாத்யா என்பவர், பாலியல் பலாத்காரம் செய்தார். அவரை, போலீசார் தேடி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, 10ம் தேதி, மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தக் கொலையில், உபாத்யாவுக்கு தொடர்பு இருப்பதாக, அவரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அஜாக்கிரதையாக செயல்பட்ட, மூன்று காவலர்களை, காவல்துறை கண்காணிப்பாளர் பிரபால் பிரதாப் சிங், இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். தலைமறைவாகி இருக்கும் உபாத்யாவை கண்டுபிடித்து கொடுக்கும் நபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என, காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பதுங்கி இருந்த உபாத்யாவை, நேற்று முன்தினம் இரவு சுற்றி வளைத்த போலீசார், அவரை சரணடையுமாறு கேட்டுக்கொண்டனர். பணிய மறுத்த அவர், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டார். இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையின் இறுதியில், உபாத்யாவும், அவரது இரண்டு கூட்டாளிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சண்டையில், இரண்டு காவலர்கள் காயமடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X