வினய் குமாரின் மனு தள்ளுபடியாகுமா? நிர்பயா வழக்கில் இன்று முக்கிய உத்தரவு| Dinamalar

வினய் குமாரின் மனு தள்ளுபடியாகுமா? 'நிர்பயா' வழக்கில் இன்று முக்கிய உத்தரவு

Added : பிப் 14, 2020
Share

புதுடில்லி: 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளியான வினய் குமார், தன் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது, உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்க உள்ளது.

தள்ளுபடி

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் குமார் சிங், அக் ஷய் குமார் ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்ற, இரண்டு முறை, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டும், சட்ட சிக்கல் காரணமாக தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், குற்ற வாளிகளில் ஒருவரான வினய் குமார், தன் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள், ஆர்.பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதிட்டதாவது:வினய் குமாரின் மனு, மேம்போக்காக பரிசீலிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிறையில், வினய் குமாருக்கு பல்வேறு கொடுமைகள் நடந்தன.
பரிசீலிக்கப்படவில்லை
தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான ஆவணங்கள் எல்லாம் பரிசீலிக்கப்படவில்லை. இவ்வாறு, அவர் வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''வினய் குமாரின் மருத்துவச் சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுஉள்ளது. ''ஜனாதிபதி, அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பின் தான், கருணை மனுவை நிராகரித்தார்,'' என்றார். இரு தரப்புக்கும் இடையே, இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காரசார வாதங்கள் நடந்தன.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக நீதிபதிகள் அறிவித்தனர். பவன் குப்தாவுக்கு உதவவழக்கறிஞர் நியமனம்நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள டில்லி திஹார் சிறையின் அதிகாரிகள், டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 'குற்றவாளிகளை தனித் தனியாக துாக்கிலிட அனுமதிக்க வேண்டும். துாக்கு தண்டனையை நிறைவேற்ற, புதிய வாரன்ட் பிறப்பிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'டில்லி சட்டப் பணிகள் பிரிவில் உள்ள வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்க விருப்பமில்லை' என, பவன் குப்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பவன் குப்தாவுக்கு சட்ட உதவிகள் செய்வதற்காக, வழக்கறிஞர் ரவி காஜியை நியமித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், திஹார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, வரும், 17ம் தேதிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X