'கோவிட் - 19' கோர தாண்டவம்: ஒரே நாளில் 242 பேர் பலி

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'கோவிட் - 19' கோர தாண்டவம்: ஒரே நாளில் 242 பேர் பலி

பீஜிங்: கிழக்காசிய நாடான சீனாவின் ஹூபெய் மாகாணத்தில், 'கோவிட் - 19' என பெயரிடப்பட்டுள்ள, 'கொரோனா' வைரஸ் பாதிப்புக்கு, ஒரே நாளில், 242 பேர் பலியாகினர்;

14 ஆயிரத்து, 840 பேருக்கு பாதிப்பு இருப்பது, ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டது.பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதால், உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக, மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர். சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், உலகின் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்த கொரோனா வைரசுக்கு, உலக சுகாதார அமைப்பு, 'கோவிட் - 19' என, அதிகாரப்பூர்வமாக பெயர் வைத்துள்ளது. ஹூபெய் மாகாணத்தில், கோவிட் - 19 வைரஸ் பாதிப்புக்கு, கடந்த செவ்வாய் கிழமையன்று, 97 பேர் பலியாகினர்.இந்நிலையில், நேற்று முன்தினம் மட்டும், ஹூபெய் மாகாணத்தில், 242 பேர் பலியாகினர். புதிதாக, 14 ஆயிரத்து, 840 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது, ஒரே நாளில் தெரியவந்தது.இதன் மூலம், ஹூபெய் மாகாணத்தில் மட்டும், கோவிட் - 19 தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,357 ஆக உயர்ந்துள்ளது; 48 ஆயிரம் பேர், வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். சீனா முழுவதும் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து, முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர, உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த, 15 மருத்துவர்கள், சீனாவில் முகாமிட்டுள்ளனர்.''கோவிட் - 19 வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பது பற்றி, இப்போதைக்கு எதுவும் கூறுவதற்கு இல்லை,'' என, உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால சிகிச்சைகள் பிரிவின் தலைவர் மைக்கேல் ரேயான் தெரிவித்தார்.

இரு இந்தியர்கள்சீனாவைத் தவிர, மற்ற நாடுகளில், கோவிட் - 19 வைரஸ் பாதிப்புக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை, 440 ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜப்பானைச் சேர்ந்த, 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பல், 3,711 பயணியருடன் ஜப்பான் திரும்பிய போது, அதில் ஹாங்காங்கைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு, கோவிட் - 19 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கப்பல், ஜப்பான் கடலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 138 பேர், அந்த கப்பலில் உள்ளனர்.அதில், கப்பல் ஊழியர்களான இரு இந்தியர்களுக்கு, கோவிட் - 19 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஜப்பானில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் செய்து வருவதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று உறுதி அளித்தார்

.ஜப்பானில் முதல் பலி

ஜப்பானில், வைரஸ் பாதிப்பால், முதல் மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 80 வயது மூதாட்டி, வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று மரணமடைந்தார். ஆனால், கோவிட் - 19 வைரஸ் தாக்குதல் தான் மரணத்துக்கு காரணம் என்பது உறுதி செய்யப்படவில்லை.

ஜப்பான் சொகுசு கப்பலில் மட்டும், புதிதாக, 44 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், சொகுசு கப்பலில், கோவிட் - 19 வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை, 218 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் சிக்கி உள்ள பாகிஸ்தான் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்குஉத்தரவிட்டுள்ளதாக, பாக்., பிரதமர் இம்ரான் நேற்று தெரிவித்தார்.

தடை நீட்டிப்பு

சீனாவில் இருந்து வரும் பயணியருக்கு, ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடை, நாளையுடன் முடிவுக்கு வருகிறது. வைரஸ் பீதி அடங்காத நிலையில், இந்த தடை உத்தரவை, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க, ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் வசிக்கும் அமெரிக்கர்களை, சிறப்பு விமானம் மூலம் அழைத்து செல்லும் பணியை, அமெரிக்க அரசு செய்து வருகிறது.

இதில், ஏற்கனவே ஒரு பயணிக்கு கோவிட் - 19 வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், மற்றொரு பயணிக்கும் தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது.இதையடுத்து, அவர் சான் டியாகோவில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வர்த்தகம் பாதிப்பு

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில், வரும், 24 முதல், 27 வரை, சர்வதேச மொபைல் கண்காட்சி நடைபெறுவதாக இருந்தது. கோவிட் - 19 வைரஸ் பீதியை அடுத்து, இந்த கண்காட்சி ரத்து செய்யப்படுவதாக, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.கோவிட் - 19 வைரஸ் தாக்கத்தால், சீனாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த பாதிப்பு, சர்வதேச அளவில் எதிரொலிப்பதாக, பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதன் மூலம், 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.இந்த நிலைமை தொடர்ந்தால், இந்த ஆண்டின் முதல் காலாண்டில், கச்சா எண்ணெய் விற்பனை, 4.35 லட்சம் பேரல் வீழ்ச்சியை சந்திக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கம்போடியா ஆதரவு

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகரில் இருந்து, கடந்த, 1ம் தேதி, 'வெஸ்டர்டாம்' என்ற அமெரிக்க சொகுசு கப்பல், 1,455 பயணியர் மற்றும் ஊழியர்களுடன், 14 நாள் சுற்றுலா புறப்பட்டது. இந்த கப்பல், நாளை ஜப்பானில் சுற்றுலாவை முடிக்கிறது. ஆனால், ஜப்பானில் கப்பலை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, பிலிப்பைன்ஸ், தைவான், தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளிடம், அனுமதி கோரப்பட்டது.அனைத்து நாடுகளும் அனுமதிக்காத நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியா, அந்த சொகுசு கப்பலை தங்கள் நாட்டில் கரை ஒதுங்க அனுமதி அளித்துள்ளது.கோல்கட்டாவில், 'கோவிட் - 19' தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா வந்த விமானத்தில், ஹிமத்ரி பர்மன் மற்றும் நாகேந்திர சிங் என்ற இரு பயணியருக்கு, 'கோவிட் - 19' வைரஸ் பாதிப்பு இருப்பது,சோதனையில் தெரிய வந்தது.இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.பாங்காக்கில் இருந்து நேற்று புதுடில்லி வந்த, 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில், பயணி ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகம்எழுந்ததை அடுத்து, அவர் தனி வார்டில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.கேரளாவில், கோவிட் - 19 வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று மாணவர்களில் ஒருவருக்கு உடல் நிலை சீரானதை தொடர்ந்து, அவர் நேற்று வீடு திரும்பினார். மற்ற இருவருக்கும் பாதிப்பு குறைந்துள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, இந்தியர்கள் மற்றும் மாலத்தீவைச் சேர்ந்தவர்களை, சீனாவில் இருந்து அழைத்து வந்த, 'ஏர் இந்தியா' விமான குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து, பிரதமர் மோடி கடிதம் அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தை, விமான குழுவினரிடம், விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று ஒப்படைத்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
16-பிப்-202010:15:43 IST Report Abuse
suresh kumar //இந்தியர்கள் மற்றும் மாலத்தீவைச் சேர்ந்தவர்களை, சீனாவில் இருந்து அழைத்து வந்த,// அந்த மாணவர்கள் நலமாயிருக்கிறார்களா? அவர்கள் சொந்தங்களுடன் சேர்ந்தார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X