ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

Added : பிப் 14, 2020
Share
 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அப்பகுதியை சேர்ந்த, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. பட்டா பெற்றவர்கள், அந்த இடத்தில் வீடு கட்டி குடியிருக்கவில்லை. அப்பகுதியை சேர்ந்த சிலர், அந்த இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில், அரசு வழங்கிய இலவச வீட்டு மனைப்பட்டா இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அகற்றி தரக்கோரி, அப்பகுதி ஆதிதிராவிட மக்கள் போராட்டம் நடத்தினர்.கடந்த சில மாதங்களுக்கு, முன்பு ஆக்கிரமிப்பாளர்களிடம், வருவாய்த்துறை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள கால அவகாசம் கொடுத்தனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாததால், கடந்த 6ம் தேதி, வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வசித்த பெண்கள் சிலர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால், ஆக்கிரமிப்பு அகற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.தொடர்ந்து, வருவாய்த் துறை மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பாளர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட 11 குடும்பத்தினருக்கு அதே பகுதியில் உள்ள அரசு இடத்தில், இலவச மனைப்பட்டா வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.இந்நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் கதறி அழுததுடன், மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.அங்கிருந்தவர்கள், அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகள் முற்றிலும் இடிக்கப்பட்டது. டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X