சுரங்கப்பாதையில் மீடியன் வசதி போக்குவரத்து முடக்கத்திற்கு தீர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுரங்கப்பாதையில் மீடியன் வசதி போக்குவரத்து முடக்கத்திற்கு தீர்வு

Added : பிப் 14, 2020
Share
 சுரங்கப்பாதையில் மீடியன் வசதி போக்குவரத்து முடக்கத்திற்கு தீர்வு

பரங்கிமலை சுரங்கப்பாதையில் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து முடக்கத்தை போக்கும் வகையிலும், மீடியன் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னை, ஜி.எஸ்.டி., சாலையையும் மேடவாக்கம் பிரதான சாலையையும் இணைப்பது பரங்கிமலை சுரங்கப்பாதை.இச்சாலையில் நாள் ஒன்றுக்கு நுாற்றுக்கணக்கான மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

பரங்கிமலை சுரங்கப்பாதையில் இருந்து, கருணீக்கர் தெரு வரை, இருபுறமும் பழக்கடை, உணவகங்கள், இனிப்பகம், வங்கிகள், மிதியடி கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.அங்கு செல்லும் வாடிக்கையாளர்கள், வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர். பகல் நேரங்களிலும், கடைகளுக்கான சரக்குகளை இறக்குவோர், சாலையில் வாகனங்களை நிறுத்துகின்றனர்.இதனால், பரங்கிமலை ரயில்வே சுரங்கப்பாலத்தில் இருந்து, மேடவாக்கம் பிரதான சாலை வரை, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் எதிர் திசையில் வருவதால், அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து முடக்கமும் ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து நம் நாளிதழும் விரிவான செய்தியை வெளியிட்டது.

இதன் நடவடிக்கையாக, பரங்கிமலை சுரங்கப்பாதையில் மீடியன் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், போக்குவரத்து முடக்கமும், விபத்துகளும் குறையும். அதே நேரம் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

- -நமது நிருபர்- -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X