சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கை காணலை!

Added : பிப் 14, 2020
Advertisement

அது, பனி விழும் அதிகாலை, 4:00. சிறுநீர் கழிக்க, பாத்ரூம் சென்று, மீண்டும் வந்து படுத்தேன். அருகில் மனைவி படுத்திருந்தாள். பக்கத்து அறையில், என் மகன்கள் இருவர் படுத்திருந்தனர். மாடியில் மகள், மாப்பிள்ளை, பேரன் ஆகியோர், தங்கள் படுக்கை அறையில் துாங்கிக் கொண்டிருந்தனர். நான் வந்த சத்தம் கேட்டு விழித்த மனைவி எழுந்து, பாத்ரூம் சென்று வந்து படுத்தாள்.

திடீரென ஜன்னலை திறந்து பார்த்தவளுக்கு, வெளியே நிறுத்தியிருந்த, மாப்பிள்ளையின் பைக், அங்கே இல்லாததை பார்த்து, அதிர்ச்சி அடைந்து, கூப்பாடு போட்டு விட்டாள்.அந்த நேரத்தில், வீடுகளில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனங்களை மர்ம மனிதர்கள் திருடுவது அடிக்கடி நடந்தது.

அதனால், எங்கள் வீட்டில் நிறுத்தியிருந்த பைக்கையும் யாரோ திருடி விட்டனர் என நினைத்து, வீட்டின் கதவை திறந்து வெளியே வந்து, காம்பவுண்ட் கேட்டை திறக்க முயன்றேன்; முடியவில்லை. வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே நான், 'பைக்கை திருடியவன், வெளியே பூட்டிச் சென்றுள்ளான்' என பதறவும், பக்கத்து அறையிலிருந்து வந்த என் மகன்கள், கையில் கிடைத்த கம்புகளை எடுத்துக் கொண்டு, தெருவில் இறங்கி, பைக் திருடனை பிடிக்க ஓடினர்.

என் மனைவி சத்தமாக அலறியதால், மாடியில் படுத்திருந்த மகள், 'என்னம்மா... என்ன ஆச்சு...' என, கேட்டவாறு வந்தாள். 'அடியே, மாப்பிள்ளை பைக்கை, யாரோ லவட்டிட்டு போயிட்டான்டி... புது பைக் ஆச்சே; மாப்பிள்ளை இப்ப தானே வாங்கினாரு...' என்றாள்.'என்னம்மா சொல்ற... மாப்பிள்ளை பைக் திருடு போகலை' என்றாள். 'படுக்கும் போது பார்த்த வண்டியை இப்ப காணலியடீ...' என்றாள் என் மனைவி.

'உன் பேரனுக்கு, காலை, 5:00மணிக்கு டியூஷன். அவனை பைக்கில் மாப்பிள்ளை அழைத்துச் சென்றுள்ளார். சத்தம் போட்டு ஊரைக் கூட்டாதே...' என்றாள்.என் மனைவி கப்சிப். கம்புடன் சென்றிருந்த மகன்கள், அப்போது தான் வர, அவர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது. அருகில் நின்று கொண்டிருந்த எனக்கு வந்த சிரிப்பை அடக்க, நீண்ட நேரமாகி விட்டது.

கே.எஸ்.வி.சாமிஅயப்பாக்கம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X