எது உண்மைக் காதல்

Added : பிப் 14, 2020
Advertisement

“காதலுக்குக் கண் உண்டு! ஆனால் அது யாரையும் பார்ப்பதில்லை” என்கிறது ஜெர்மானியப் பழமொழி. காதல் வந்தவர்கள் சுற்றுப்புறத்தை மறக்கிறார்கள், தங்கள் நிலையை மறக்கிறார்கள், தங்கள் பணியை மறக்கிறார்கள். தங்களுக்குள் ஓர் உலகத்தை உருவாக்கிக் கொண்டு தாங்களே ஓர் உலகம் என்று எண்ணிக் கொள்கிறார்கள்.

“காதல், இருமல், புகை இம்மூன்றையும் மூடிமறைப்பது சிரமம்” என்று பெஞ்சமின் பிராங்க்ளின் சொன்னார். மனித இனத்தின் தோற்றமே காதலில்தான் தொடங்குகிறது. காதல் இல்லாத வாழ்வை நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. அதனால்தான் பாரதி “காதல் காதல் காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்” என்று குயில்பாட்டில் பாடினார்.

தோண்டத் தோண்ட தங்கத் துகள்களை அள்ளி வழங்குகிற தங்கச்சுரங்கம் மாதிரி கொள்ளை போகும் உள்ளங்களால் துாண்டத் துாண்டக் காதல் வளர்ந்து கொண்டே போகிறது. காதல் மனிதர்களைக் கவிஞர்களாக்குகிறது, கவிஞர்களைக் காவியங்கள் படைக்க வைக்கிறது.இலக்கியத்தில் காதல்சங்க இலக்கியத்தின் அகப் பாடல்கள் காதல்பாடல்களின் ஆகச்சிறந்த தொகுப்பாகத் திகழ்கிறது. தருமிக்குப் பொற்கிழி தருவதற்காக இறையனார் பாடிய பாடலாக திருவிளையாடல் படம் சொல்லும் “கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத்தும்பி” எனத் தொடங்கும் பாடலே குறுந்தொகையின் முதல்பாடலாக அமைகிறது.

தலைவி சூடியுள்ள பூவில் மொய்க்கும் தும்பி எனும் வண்டைப் பார்த்து “ஒவ்வொரு பூவாக நுழைத்து உள்ளிருக்கும் தேனைச் சுவைக்கும்வண்டே என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் மணம் வீசும் பூவை நீ கண்ட துண்டா?” என்று கேட்பதாக அப்பாடலைக் கவிஞர் பாடியுள்ளார்.

உண்மைக்காதல் இந்த உலகைப் புதுப்பிப்பது உண்மைக்காதல்தான். ஆனால் எது உண்மைக் காதல் என்பதுதான் இப்போதைய கேள்வியே! எல்லோரையும் பார்க்கும்போது வருவதல்ல காதல். யாரோ ஒருவரைப் பார்க்கும்போது வருவதுதான் உண்மைக்காதல்.

“யாயும் ஞாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர், யானும் நீயும் எவ்வழி அறிதும், செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே” எனும் குறுந்தொகைப் பாடலை கண்ணதாசன் எளிமைப்படுத்தி, “நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ? இன்று முதல் நீ வேறோ நான் வேறோ! காணும் வரை நீ எங்கே! நான் எங்கே! கண்டவுடன் நீ இங்கே! நான் அங்கே” என்று பாடினார். சூர்பனகை அருகில் வந்து நின்று தன்னை விரும்புவதாகச் சொன்னபோதும் இராமபிரானால், “இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்” என்று உறுதியாக இருக்க முடிந்ததன் காரணம் சீதை மீது கொண்ட பேரன்புதான்.

திருமணம் செய்தால் என் உள்ளம் கவர் கள்வனையே மணம் செய்வேன், “மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே” என்று உறுதியாக நாச்சியார் திருமொழியில் சொன்னவர் சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் நாச்சியார்.

“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள், மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள், பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள், பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்” என்று பதிகம் பாடிய திருநாவுக்கரசர் தெய்வீகக் காதலைத் தமிழால் தந்தவர்.

திருவள்ளுவரும் கண்ணதாசனும் “அர்த்தமில்லாமல் வாழ்கிறோம் என்பதை உணரும்போது சிலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள், சிலபேர் காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்” என்று கண்ணதாசன் ஒருமேடையில் சொன்னார்.

திருக்குறளின் இன்பத்துப்பால் காதலின் இன் பத்தை வெகுநுட்பமாகச் சொல்கிறது. கண்ணதாசன் பல திரைப்படப் பாடல்களில் வள்ளுவத்தை எளியசொற்களால் எடுத்துரைக்கிறார்.'யான்நோக்கும் காலை
நிலன்நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்லநகும்” எனும் குறளை கண்ணதாசன் தன் தேன்சொற்களால், “உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே!நேரிலே பார்த்தாலென்ன நிலவென்ன தேய்ந்தாபோகும்புன்னகை புரிந்தாலென்ன பூ முகம் சிவந்தா போகும்?” என்று தந்துள்ளார்.

எதார்த்த வாழ்வில் காவியக் காதல்கள் நிஜவாழ்வில் எப்படி இருக்கின்றன? பள்ளிச்சீருடையோடு பொதுஇடங்களில் சில பிள்ளைகள் ஆணும் பெண்ணுமாய் ஒன்றாயிருப்பதைக் காதல் என்று சொல்லமுடியுமா? முகநுாலிலும் டுவிட்டரிலும் நண்பர்களாய் தொடங்கி அந் நட்பைக் காதலாய் மாற்றிப் பெற்றோர்களைப் பதைபதைக்க வைத்து வீட்டை விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறித் தங்கள் வாழ்வையே தொலைத்து நிற்கும் பிள்ளைகளின் செயலைக் காதலென்று சொல்லமுடியுமா? காதல் என்று சொல்லி மாநிலம் கடந்து சென்று அங்கே சின்னாபின்னாமாகும் பதின்பருவத்துப் பிள்ளைகளை என்ன சொல்வது? மோதலில் தொடங்கிக் காதலில் முடியும் மூன்றுமணி நேரத் திரைப் படக் காதல்களைப் போல் உண்மைக் காதல்கள் இருப்பதில்லை.

தீர்மானிக்க முடியாத புதிர்புறத்தோற்றம் மட்டும் பார்த்து வருவதல்ல காதல், அகத்தின் முகத்தில் அழகாய் தெரிவதுதான் உண்மைக் காதல். ஒருமுறை வருவதுதான் காதல் என்று காவியங்களும் கவிதைகளும் சொல்ல, எதார்த்த வாழ்வின் காதல்கள் அப்படி இருக்கின்றனவா! எனும் கேள்விக்குப் பதில், இல்லை என்பதுதான். காதல் என்ற சொல் உதடுகளால் கூட எச்சில்படுத்த முடியாத சொல் என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே இருக்க, இன்னொரு பக்கம் காதல் என்ற பெயரில் சமூகத்தில் அவலங்கள் அரங்கேறும் காட்சிகளைக் காண்கிறோம்.

நல்லது கெட்டது தெரியாத பதின்பருவத்தில் திரைப்படங்களை பார்த்து அது போலச் செய்வதற்குப் பெயர்தான் காதல் என்று சொல்லிவிட முடியுமா?நடை, உடை சார்ந்து பதின்பருவத்தில் வரும் இனக்கவர்ச்சி நாளாக நாளாக எதார்த்த வாழ்வின் சுழல்களில் சிக்கிக் காணாமல் போகிறது. தேன்பாட்டிலுக்குள் விழுந்த எறும்பு, பாட்டிலில் உள்ள தேன் முழுவதையும் தானே அருந்திவிடலாம் என்று நினைத்து அப்பாட்டிலுக்குள் தன் வாழ்வை முடித்துக் கொள்வதைப் போலக் காதல் எல்லோரையும் தன் வயமாக்கித் தன்னுள் பொருத்திக் கொள்கிறது.
தவறான புரிதல்

திருமணத்திற்கு முன் வருவதுதான் காதல் என்று தவறாக புரிந்திருக்கிறோம். உண்மைக் காதல் திருமணத்திற்குப் பின்தான் தொடங்குகிறது, அந்த இல்லறக் காதல் விதையாய் விழுந்து செடியாய் முளைத்து மரமாய் பூத்துக் காய்த்து

முதுமையிலும் கூடக் கனியாகிறது. இளம்வயதில் அழகைக் கண்டு வரும் காதல், வயதானபின் மனத்தைக் கண்டு அன்பில் மலர்கிறது. மறக்கச் செய்வதில் காலமும் காதலும் ஒன்றை ஒன்றுக் கடந்தபடி ஓடிக்கொண்டேயிருக்கின்றன.

காதலால் சிறந்த உள்ளங்களும் உண்டு, காதலால் சிந்தை சிதைந்த உள்ளங்களும் உண்டு. காதல் எப்போதும் அழகாகத்தானிருக்கிறது, கண்களால் காதல் கொள்ளாமல் இதயத்தால் காதல் கொள்ளும் மனிதர்கள் இருக்கும்வரை!

- பேராசிரியர் சவுந்தர மகாதேவன், தமிழ்த் துறைத் தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி,99521 40275

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X