பொது செய்தி

தமிழ்நாடு

அதிகார பொம்மைகள்! ஊராட்சி தலைவர்களுக்கு செலவு அதிகாரம் இல்லை

Added : பிப் 14, 2020
Advertisement
 அதிகார பொம்மைகள்! ஊராட்சி தலைவர்களுக்கு செலவு அதிகாரம் இல்லை

பெ.நா.பாளையம்:ஊராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர்கள் பதவியேற்று, ஒரு மாதமாகியும், அவர்களுக்கு செலவு செய்யும் அதிகாரத்தை, தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால், அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முடியாத சிக்கல் எழுந்துள்ளது.தமிழகத்தில், 385 ஊராட்சி ஒன்றியங்களில், 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளில், மொத்தம், 31 நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன.
இதில், கிராம ஊராட்சிகளுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, ஊராட்சி பொது நிதி மற்றும் மத்திய, மாநில அரசு வழங்கும் நிபந்தனைக்குட்பட்ட மானியக்குழு நிதி, மாநில நிதிக்குழு மானிய நிதி, மாவட்ட திட்ட நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ், ஊராட்சிகளில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
மேலும், ஊராட்சி பொது நிதி கணக்கில் பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களின் உரிம கட்டணம், ஆசிரியர், அரசு ஊழியர், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் செலுத்தும் தொழில் வரி வருவாய், பொது நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது.
இது தவிர, மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் மாநில நிதிக்குழு மானிய நிதி, ஊராட்சி மன்ற மக்கள் தொகைக்கு ஏற்ப, 20 ஆயிரம் முதல் 3 லட்ச ரூபாய் வரை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அடிப்படை தேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒதுக்கப்படும் நிதியின் மூலம், இந்திரா நினைவு குடியிருப்பு, பசுமை வீடு, திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.கடந்த, உள்ளாட்சி மன்ற நிர்வாகத்தில், ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்கள் காசோலையை பயன்படுத்த அனுமதி இருந்தது.
ஊராட்சி பகுதி மக்களின், தேவை அறிந்து, உடனடியாக அனைத்து பணிகளும் நடந்தன.ஆனால், தற்போது மோட்டார் பழுது, பொது கழிப்பறையை சுத்தம் செய்தல், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட எந்த பணிக்கும், ஆட்கள் வர தயங்குகின்றனர். நாயக்கன்பாளையம் ஊராட்சி, கோவனுார் ஏ.டி., காலனியில், கழிப்பறையை சுத்தம் செய்யும் நபர்களுக்கு கூட ஊதியம் தர முடியாததால், அப்பகுதியில் சுகாதார குறைவு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதேபோல, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பழுதுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடிவதில்லை.
வவுச்சருக்கும் பணமில்லை!
நாயக்கன்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் சின்னராஜ் கூறுகையில்,''தற்போது தலைவர் மற்றும் துணைத் தலைவர் குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் செலுத்த மட்டுமே, காசோலைகளை பயன்படுத்த முடியும். பிற செலவினங்களுக்கு பயன்படுத்த முடியாது. மேலும், பணியாளர்கள் மற்றும் 'பம்ப் ஆபரேட்டர்'களுக்கு மாத சம்பளம் வழங்கலாம் என, தமிழக அரசு 'வவுச்சர்' முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால், அவர்களுக்கு வவுச்சர் கொடுக்கப்பட்டு, ஒரு வாரம் ஆகியும், இன்னும் பணம் கிடைக்கவில்லை. இதனால் சுகாதார பணியாளர்கள் பலர், அலுவலகமே வருவதில்லை. எனவே, தமிழக அரசு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X