அரசு அலுவலகங்களில், சோலார் பேனல்: மரபுசாரா எரிசக்தியை அதிகரிக்க அதிகாரிகள் மும்முரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில், 'சோலார் பேனல்': மரபுசாரா எரிசக்தியை அதிகரிக்க அதிகாரிகள் மும்முரம்

Added : பிப் 14, 2020
Share
 அரசு அலுவலகங்களில், 'சோலார் பேனல்': மரபுசாரா எரிசக்தியை அதிகரிக்க அதிகாரிகள் மும்முரம்

திருப்பூர்:அரசு அலுவலகங்களில் 'சோலார் பேனல்' அமைத்து, மரபுசாரா எரிசக்தியை அதிகரிக்க மின்வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.மாநிலத்தில், அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கும் பொருட்டு, மரபு சாரா எரிசக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக, தனி நபர்கள் சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து, அதனை மின்வாரியத்திற்கு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு மின் துறையும் இணைந்து செயல்படுத்துகிறது. இதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டும் வருகிறது.அதேசமயம், அரசுத்துறைக்கு சொந்தமான கட்டடங்களில், சூரிய சக்தியைக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படவும் உள்ளன. அரசு அலுவலகங்களில் பகல் நேரங்களில் தினசரி தேவைப்படும் மின்சாரத்தின் அளவிற்கு ஏற்ப திறன் கொண்ட 'பேனல்' அமைத்து, அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்தப்படவும் உள்ளது.தவிர, விடுமுறை நாட்கள் மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படவும் உள்ளது. அதன்படி, திருப்பூர் மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அரசு அலுவலக மேற்கூரைகளில், 'பேனல்' அமைப்பதற்கான, சதுரஅடி பரப்பு, அளவீடு செய்யப்பட்டுள்ளது.மேற்பார்வை பொறியாளர் ஜவகர் கூறுகையில், ''அரசு அலுவலகங்களில், தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மூலம் 'சோலார்' பேனல் அமைக்கப்படுகிறது. திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில், முதற்கட்டமாக, மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், துணை மின் நிலைய கட்டடங்களில், பேனல் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து அரசு கட்டடங்களில், சோலார் பேனல் அமைக்க, கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X