போலீஸ் டைரி: திருவள்ளூர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி: திருவள்ளூர்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020
Share

விபத்தில் ஒருவர் பலி

திருத்தணி: திருத்தணி அடுத்த, தெக்களூர் காலனியைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் மாணிக்கம், 55. இவர், நேற்று அதிகாலை, 5:30 மணியளவில், திருத்தணி- - பொதட்டூர்பேட்டை முதன்மை மாநில நெடுஞ்சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டார்.அப்போது, திருத்தணி, குண்டலுார், அண்ணா நகரைச் சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ், 17 என்பவர், தன் ஸ்டார் சிட்டி இருசக்கர வாகனத்தில் தாய் ரேவதி, 40, சகோதரி, 18 என்பவரை ஏற்றிக் கொண்டு, தெக்களூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, நந்தியாறு பாலம் அருகே சாலையோரம் நடந்து சென்ற மாணிக்கத்தின் மீது, இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.இதில், மாணிக்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். விக்னேஷ், ரேவதி, கவிதா ஆகியோர் படுகாயத்துடன், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருத்தணி, போலீசார் விசாரிக்கின்றனர்.

ரயில் மோதி ஒருவர் பலி

திருத்தணி: திருத்தணி, சந்து தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 55. இவர், நேற்று காலை, பழைய திரவுபதியம்மன் கோவில் அருகே உள்ள ஏரிக்கு, காலை கடன் கழிக்க சென்றார். அப்போது, அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அரக்கோணம் மார்க்கத்தில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த விரைவு ரயில் ஒன்று மோதியதில், வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

டூ - -வீலர்கள் மோதல்

திருத்தணி: அரக்கோணம் அடுத்த, தணிகை போளூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அரவிந்த், 21. இவர், நேற்று முன்தினம் இரவு, நண்பர் விக்கி, 24, என்பவருடன், ஸ்பிளன்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில், திருத்தணி பைபாஸ் சாலை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பொன்பாடி, மேட்டுக்காலனியைச் சேர்ந்த மோகன் ஆச்சாரி, 65, என்பவர், ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்த போது, பைபாஸ் ரவுண்டானாவில் இரு வாகனங்களும் மோதிக் கொண்டன.இதில், மேற்கண்ட மூவரும் படுகாயம் அடைந்தனர். அதை தொடர்ந்து, மூன்று பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வாகனங்கள் பறிமுதல்

ஊத்துக்கோட்டை: வெங்கல் போலீசார் நேற்று முன்தினம் இரவு, விளாப்பாக்கம், மாகரல் ஆகிய பகுதிகளில், ரோந்துப் பணியை மேற்கொண்டனர்.அப்போது, அவ்வழியே வந்த, பேஷன்புரோ, யமஹா எப்இசட், பல்சர் ஆகிய வாகனங்களை நிறுத்தினர். போலீசாரைக் கண்டதும், ஓட்டுனர்கள் தப்பி ஓடினர்.போலீசார் வாகனங்களை சோதனை செய்ததில், மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து, வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுனர்களை தேடி வருகின்றனர்.

சிறுவன் மாயம்

மப்பேடு: மப்பேடு அடுத்த, முதுகூர் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவன், கடந்த, 9ம் தேதி வீட்டை விட்டு, ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர் இருசக்கர வாகனத்தில், நண்பரை பார்க்க சென்றுள்ளார்.பின் வீடு திரும்பாததால், பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, மப்பேடு போலீசில், சிறுவனின் தந்தை அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மயங்கி விழுந்து விவசாயி பலி
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், பெரிய களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லன் மகன் லோகநாதன், 55; விவசாயி.இவர், கடந்த, 10ம் தேதி, சின்னம்மாபேட்டையில் உள்ள எலுமிச்சை தோட்டம் ஒன்றில், பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்போது, மூச்சு திணறல் ஏற்பட்டு லோகநாதன் மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர் அவரை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்கு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று லோகநாதன் இறந்தார். திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சமையலர் வீட்டில் திருட்டு
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், எல்.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் மனைவி நீலா, 53. இவர், அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம், காலை, 9:00 மணிக்கு, நீலா வழக்கம் போல் வீட்டை பூட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்றார்.
அங்கு பணி முடித்துக் கொண்டு, மாலை, 4:00 மணிக்கு வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்ததைக் கண்டார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 12 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து, திருத்தணி போலீசில், நீலா அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து
விசாரிக்கின்றனர்.

நகை, பணம், 'அபேஸ்'
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அடுத்த, அய்யர்கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி, 32. தனியார் தொழிற்சாலை ஊழியர். நேற்று முன்தினம், பகல் நேரத்தில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றனர்.பீரோவை உடைத்து, 11 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர். கவரைப்பேட்டை போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X