பொது செய்தி

தமிழ்நாடு

தேவை! ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள்...சின்னசேலத்தில் பயணிகள் கடும் அவதி

Added : பிப் 14, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:சின்னசேலம் ரயில் நிலையத்தில் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குடிநீர், கழிப்பிடம் மற்றும் பாசஞ்சர் ரயில்களில் பெட்டிகள் குறைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சின்னசேலம் ரயில் நிலையம் மூலம் கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வருகின்றனர். இந்த ரயில் நிலையத்திலிருந்து, சேலம் - விருத்தாசலம், சேலம் - சென்னை, காரைக்கால் - பெங்களூரூ பகுதிகளுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்படுகிறது.மேலும், வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் புதுச்சேரியில் இருந்து கேரளா வழியாக மங்களூருவுக்கும் சனிக்கிழமைகளில் மங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
சனிக்கிழமைகளில் புதுச்சேரியிலிருந்து பெங்களூருவுக்கு வாராந்திர ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதில் நாளொன்று 1000க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.தினசரி ஆத்துார், சேலம் ஆகிய நகரங்களில் உள்ள கல்லுாரிகள், பள்ளிகளுக்குச் செல்பவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என அதிக அளவில் சின்னசேலம் ரயில்நிலையத்திற்கு வந்து சேலம் உள்ளிட்ட பெருநகரத்திற்கு ரயில் ஏறி செல்கின்றனர். உயர்ந்துவரும் பஸ் கட்டணத்தால் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஆனால் இந்த பாசஞ்சர் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை 13லிருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவில் பயணிகள் இருக்கைகளின்றி நின்று செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.மேலும் வர்த்தக ரீதியாக மேம்பட்டுள்ள சின்னசேலம் ரயில் நிலையத்தில் தற்போதுதான் பிளாட்பாரம் மாறி செல்வதற்கு ஏற்ப மேம்பால நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரயில் நிலையத்தில் அடிப்படை தேவையான குடிநீர் வசதியோ, கழிப்பிட வசதியோ பயணிகளின் வருகைக்கு ஏற்றவாறு அமைக்கப்படாமல் உள்ளது.
கழிப்பிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் அருகில் உள்ள திறந்த வெளியில் ஒதுங்கும் அவல நிலை நீடித்து வருகிறது. பலமுறை பயணிகள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீர் வசதியும் முற்றிலுமாக கண்டு கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. மேலும், முதலாவது பிளாட்பாரத்தில் மட்டுமே மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. 2வது பிளாட்பாரத்தில் அதிகளவு ரயில்கள் வருவதில்லை என்ற போதிலும் ரயில்கள் கிராசிங் நேரத்தில் இந்த பிளாட்பாரம் வழியாகத்தான் பெங்களூரு ரயில்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் இந்த பிளாட்பாரம் வழியாக ரயில் ஏறுவது, இறங்குவது கட்டாயமாகிறது.இதனால் அந்த பிளாட்பாரத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் மேலும் அவதியடையம் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் மழையில் நனைந்தபடி ரயில் ஏற வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. ரயில்கள் வருகைக்கான அறிவிப்புகள் வழங்கிடும் முறை இங்கு இன்னமும் செயல்படுத்தவில்லை.எனவே அதிகளவில் பயணிகள் பயன்படுத்தும் சின்னசேலம் ரயில் நிலையத்தில் முக்கிய தேவைகளான குடிநீர், கழிப்பிடம், பாசஞ்சர் ரயிலில் பெட்டிகள் அதிகரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X