பொது செய்தி

தமிழ்நாடு

தரம் உயர்ந்த அரசுப்பள்ளியை தத்தெடுத்த கிராம மக்கள்

Added : பிப் 14, 2020
Advertisement
 தரம் உயர்ந்த அரசுப்பள்ளியை தத்தெடுத்த கிராம மக்கள்

சிவகங்கை:மூடுவிழா காணவிருந்த அரசுப்பள்ளியை மீட்டெடுத்ததுடன், அப்பள்ளியை கிராம மக்களையே தத்தெடுக்க வைத்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக உருவாக்கி வருகிறார் தலைமையாசிரியர்.

சிங்கம்புணரி ஒன்றியம் மல்லாக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி 1954 ல் துவக்கப்பட்டு 1982ல் நடுநிலைப்பள்ளியாகி, பிறகு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தது. 1990 முதல் தொடக்கப் பள்ளி மட்டும் தனியாக இயங்கி வருகிறது. வழக்கம் போல் இக்கிராம பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடிச்செல்ல, பள்ளியின் மாணவர் எண்ணிக்கை எட்டு ஆனது.பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டது.

அப்போது தலைமையாசிரியராக பணியேற்ற பொன்.பால்துரை பள்ளியை மீட்டெடுக்க முயற்சி செய்தார்.பார்வை இல்லா பள்ளி கட்டட தோற்றம், ஹிந்தி, யோகா, நடனம், கணினி பயிற்சி இல்லாதது, ஆசிரியர் பற்றாக்குறை என பல காரணங்களை பெற்றோர் கூற, அவற்றை இப்பள்ளியில் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து மாணவர்களை சேர்க்க வலியுறுத்தினார். முதலில் தனது சொந்த பணத்தை செலவழித்து பள்ளி மறுசீரமைப்பை துவக்கினார்.

இதனால் தங்கள் பிள்ளைகளை பெற்றோர் மீண்டும் இப்பள்ளியில் சேர்த்தனர். இதன் காரணமாக பள்ளி மாணவர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 8 ல் இருந்து 64 ஆனது.தொடர்ந்து கிராம முக்கியஸ்தர்களை சந்தித்து பள்ளி வளர்ச்சிக்கு உதவும்படி வேண்ட கிராம மக்களும் பள்ளி வளர்ச்சிக்கு உதவ ஆரம்பித்தனர்.

கிராம இளைஞர்கள் சார்பில் கூடுதலாக மூன்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வகுப்பறையில் டைல்ஸ் பதிக்கப்பட்டு பாழடைந்து கிடந்த ஓட்டு கட்டடம் வண்ணம் பூசப்பட்டு பராமரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.இக்கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் மேகவர்ணம் பள்ளியையே தத்தெடுத்து, ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுத்து உள்ளார். சீருடை ஒருவர், நாற்காலிகள் ஒருவர் என கிராமமே புரவலர்களாக மாறிவிட்டனர்.

பொன்.பால்துரை தலைமை ஆசிரியர்: ஆரம்பத்தில் இப்பள்ளியில் படித்த பலர் தற்போது துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் தொழில் செய்கின்றனர். இப்பள்ளியில் படிக்கும் அடுத்த தலைமுறையினரும் சிறந்த கல்வியாளர்களாக, தொழில் அதிபர்களாக வர வேண்டும் என்பதில் ஒட்டுமொத்த கிராம மக்களும் கவனம் செலுத்துகிறார்கள். ஆசிரியர்களின் உறுதிமொழியை நம்பி அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

தங்களின் கிராமத்தின் அடையாளமாகவே இப்பள்ளியை பார்க்கிறார்கள். அதை முன்மாதிரி பள்ளியாக மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ளது.

அ.மேகவர்ணம் தொழிலதிபர்: எத்தனையோ அதிகாரிகள், தொழிலதிபர்களை உருவாக்கிய பள்ளி இது. மூடப்பட இருந்த இப்பள்ளியை, தற்போதைய தலைமையாசிரியர் தான் மீட்டெடுத்து உள்ளார். அதற்கு கிராம மக்கள் உறுதுணையாக உள்ளோம். என்ன தேவை என்றாலும் செய்துகொடுக்க தயாராக உள்ளோம். கல்வி மற்றும் பன்முகத்திறமை நன்றாக போதிக்கப்படுகிறது. வருங்காலத்தில் இக்கிராமத்தில் இருந்து பல கல்வியாளர்களும், தொழிலதிபர்களும் உருவாகி வருவர்.

எஸ்.கவிதா, பெற்றோர்: தனியார் பள்ளியில் படித்த எனது மகனை தலைமை ஆசிரியர் உறுதியளித்தால் இங்கு சேர்த்தேன். உறுதியளித்த படியே அனைத்தும் நன்றாக உள்ளது. ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களை நன்றாக படிக்கிறான். தற்போது ஸ்மார்ட் வகுப்பறையும் வந்துவிட்டது. பள்ளியின் சுற்றுச்சூழலும் நன்றாக உள்ளதால் எங்களுக்கு முழு திருப்தியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X