பொது செய்தி

தமிழ்நாடு

நகர ஊரமைப்புத்துறை அதிகாரிகளுக்கு...வணக்கமுங்க!

Added : பிப் 14, 2020
Advertisement
நகர ஊரமைப்புத்துறை அதிகாரிகளுக்கு...வணக்கமுங்க!

நீங்கதாங்க, இந்த நகரத்தின் அச்சாணி. ஒரு நகரம் எப்படி அமையணும்னு திட்டமிட்டு, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கிற பொறுப்பு ஒங்களைத்தானே சார்ந்தது. ஆனா, நீங்க, என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க! 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கறதை விட்டுட்டு, கட்டடங்களுக்கு 'அப்ரூவல்' கொடுக்குறது மட்டுமே வேலைன்னு நெனைச்சிட்டு இருக்கீங்க!நம்மூர்ல ஏகப்பட்ட வேலை நடந்துட்டு இருக்கு. கோடிக்கணக்குல வளர்ச்சி பணிகள் செஞ்சிட்டு இருக்காங்க. உதாரணத்துக்கு, காந்திபுரத்திலும், நுாறடி ரோட்டிலும் பாலம் கட்டியிருக்காங்க. அவிநாசி ரோட்டுல, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு, 9.5 கி.மீ., துாரத்துக்கு கட்டப்போறதா சொல்லியிருக்காங்க. திருச்சி ரோட்டுல கட்டிக்கிட்டு இருக்காங்க. போதாக்குறைக்கு, 'மெட்ரோ ரயில்' திட்டத்தையும் செயல்படுத்தப் போறதா சொல்றாங்க.இதற்கெல்லாம் அடிப்படையா, 'மாஸ்டர் பிளான்' தயாரிச்சிருக்க வேண்டாமா? கடைசியா, 1994ல் 'மாஸ்டர் பிளான்' தயாரிச்சது. வருஷம் என்னாச்சு? ஒவ்வொரு அஞ்சு வருஷத்துக்கும்/ பத்து வருஷத்துக்கும் ஒரு தடவை மறு சீராய்வு செஞ்சு, புதுசா தயாரிச்சு வெளியிட்டு இருக்கணுமே; 26 வருஷம் ஓடிருச்சே.தி.மு.க., ஆட்சிக்காலத்துல, புதுசா 'மாஸ்டர் பிளான்' தயாரிச்சாங்களே. ஞாபகம் இருக்கா? ஆட்சி மாறியதும், அதை கடாசிட்டீங்க. மறுசீராய்வு செஞ்சு, புதுசா வெளியிடுறதுக்கு, 'கவர்மென்ட் ஆர்டர்' போட்டு எத்தனை வருஷம் ஆச்சு? நீங்களோ, ஆள் பலம் பத்தலைன்னு காலத்தை இழுத்தடிச்சிட்டு இருக்கீங்களே, நல்லாவா இருக்கு?ஒரு நகரம்னா இப்படித்தான் இருக்கணும்னு ஒரு திட்டமிடல் இருக்க வேண்டாமா? அதற்குதானே, 'மாஸ்டர் பிளான்'. அதை தயாரிக்கறதுதானே, உங்க அடிப்படை வேலையா இருக்கணும். அதை செய்யாம, கரன்சி விளையாட்டு விளையாடுற இடமா, அலுவலகத்தை மாத்திட்டதா பேசிக்கிறாங்களே. கரன்சி இல்லாம, உங்க துறையில எந்த வேலையும் நடக்காதாமே?அப்புறம், இன்னொரு முக்கியமான விஷயம் கேள்விப்பட்டேன். நிலங்களை வகை மாற்றம் செய்றது. விவசாய நிலத்தை குடியிருப்புக்கும், வணிக பயன்பாடு, தொழிற்சாலை பயன்பாட்டுக்கும் மாத்தணும்னா, ஒங்க துறையில விண்ணப்பிச்சு, நில வகை மாற்றம் செஞ்சு உத்தரவு வாங்கணும். இதுக்கு, ஏக்கருக்கு ரூ.10 லட்சம், சதுரடிக்கு ரூ.100-120ன்னு லஞ்சம் கொடுக்கறதுக்கு, 'ரேட்' நிர்ணயம் செஞ்சிருக்காங்களாமே; இதெல்லாம் நல்லாவா இருக்கு?வார்டுக்கு ஒன்னுன்னு, மாநகராட்சி முழுவதும், 100 திட்டச்சாலை உருவாக்கணும்னு, கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, கார்ப்பரேஷன்ல தீர்மானம் போட்டாங்க. அதைப்பத்தி, ஒங்க டிபார்ட்மென்ட்காரங்க எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியலை. பத்து வருஷத்துக்கு முன்னாடி, செம்மொழி மாநாடு நடந்தப்ப, புதுசா மூணு திட்டச்சாலை உருவாக்குனாங்க; அதுக்கப்புறம் எந்த முயற்சியும் எடுக்கலையே.நகர அபிவிருத்தி கட்டணமா, கோயமுத்துார் மக்கள், கோடிக்கணக்குல பணம் செலுத்தியிருக்காங்க. அதை யோசிச்சு பார்க்க வேண்டாமா? அவ்ளோ தொகையும் கஜானாவுல முடங்கியிருக்கே... கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள ஆறு திட்டச்சாலைகளை உருவாக்குறதுக்கு கோப்பு தயாரிச்சு, ரூ.45 கோடி கேட்டு, பரிந்துரை செஞ்சு அனுப்புனாங்களே; அதுவாவது, ஞாபகம் இருக்குதுங்களா?இனியாவது, அந்த பைல்-ஐ துாசு தட்டி பாருங்க. நிதி ஒதுக்குனீங்கன்னா, புதுசா திட்டச்சாலை உருவாகும். நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையும். திட்டச்சாலைகளை உருவாக்காமல், பிரதான சாலையில் பாலங்களை மட்டும் கட்டினால், போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு கெடைக்காதுங்கிறது ஒங்களுக்கு தெரிஞ்சதுதானே?அப்புறம், ஏற்கனவே திட்டச்சாலையா நீங்க அப்ரூவல் செய்ததை, 'கோர்ட் ஆர்டர்' வாங்கிட்டு வந்தால், ரத்து செஞ்சு உத்தரவு கொடுக்குறீங்களாமே. சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்ன வேடம்பட்டி, சிங்காநல்லுார் ஏரியாவுல ஏகப்பட்ட திட்டச்சாலைகள் காணாமல் போயிடுச்சுன்னு, விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க.புதுசா திட்டச்சாலை உருவாக்க வேண்டிய நீங்க, பழைய திட்டச்சாலைகளை ரத்து செய்றதுக்கு உடந்தையா இருக்கறதா சொல்றாங்க; விளக்கம் கேட்டா, கோர்ட் ஆர்டர்னு சொல்லி, நழுவுறீங்களாமே.மக்களுக்கு பிரயோஜனமா இருக்கும்னு, அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஒரு சட்டம் கொண்டு வந்தீங்களே; என்னாச்சுங்க? வரன்முறைப்படுத்துறதுக்கு ஆபீசுக்கு, 'லோ லோ' ன்னு நாயா மாசக்கணக்குல அலைய வேண்டியிருக்குறதுன்னு மக்கள் புலம்புறாங்க. காசு கொடுத்தால்தான், அப்ரூவலே கெடைக்குதாமே?அனுமதியற்ற கட்டடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்லையாமே. பெயரளவுக்கு விண்ணப்பம் மட்டும் வாங்கி, 'பைல்' செஞ்சிட்டு, கோர்ட்டுல வழக்கு நடந்துக்கிட்டு இருக்குன்னு, பொத்தாம் பொதுவா பதில் சொல்லி, கண்டுக்காம இருக்கீங்களாமே.இதுக்கு முன்னாடி, சென்னையில இருந்து மாசம் தவறாம உயரதிகாரிங்க, ஆய்வுக்கு வருவாங்களாம். ஒரு பைல் கூட 'பெண்டிங்' இருக்கக்கூடாது;30 நாட்களுக்குள் அப்ரூவல் கொடுக்கணும்ங்கிற நடைமுறை இருந்துச்சாம். இப்ப, மூணு வருஷம் நடந்தாலும் அனுமதி கெடைக்கறதில்லை. சென்னையில இருந்தும் அதிகாரிங்க எட்டிப்பார்க்கறதில்லையாமே!அப்புறம், புதுசா கட்டட விதி அமல்படுத்தியிருக்கீங்க; கட்டுமான துறைக்கான அடிப்படை சட்டம் எவ்வளவு முக்கியமானது; தமிழ்ல வெளியிட்டிருக்க வேண்டாமா? இங்கிலீஷ்ல மட்டும் ரிலீஸ் செஞ்சிருக்கீங்க. அதனால, புதுசா அமல்படுத்தியிருக்கிற விதிகளால், எவ்வளவு சலுகை கெடைக்கும்ன்னு மக்களுக்கு தெரியறதில்லையே; இதெல்லாம் பெரிய குறையாச்சே.இப்ப, ஒரு லே-அவுட் அப்ரூவலுக்கு விண்ணப்பிச்சா, சென்னைக்கு பரிந்துரை செஞ்சு அனுப்புறீங்க. அதுக்கப்புறம், விண்ணப்பதாரரே, சென்னைக்கு படையெடுக்க வேண்டியிருக்கு. பக்கத்து மாநிலம் கேரளாவை எட்டிப்பாருங்க.பாலக்காட்டுல ஒரு அடுக்குமாடி கட்டடம் கட்டுறதுக்கு, திருவனந்தபுரத்துக்கு கோப்பு அனுப்புறாங்க. குறிப்பிட்ட காலத்துக்குள்ள அப்ரூவல் ஆகி, விண்ணப்பதாரர் வீடு தேடி வருது ஆர்டர். ஆனா, நம்மூர்ல? வெட்கி தலைகுனிய வேண்டியிருக்கே!இனியாவது கொஞ்சம் மனச்சாட்சியோட வேல பாருங்களேய்யா...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X