பொது செய்தி

தமிழ்நாடு

எல்லாம் பேச்சில் தான் செயலில் இல்லையே: வளர்ச்சியில் பின் தங்கும் விருதுநகர்

Added : பிப் 14, 2020
Advertisement
 எல்லாம் பேச்சில் தான் செயலில் இல்லையே:  வளர்ச்சியில் பின் தங்கும் விருதுநகர்

விருதுநகர்:விருதுநகரில் அடர்வனம், ஏரி, உரக்கிடங்கு உள்ளிட்ட திட்டங்களை நகராட்சி கமிஷனர் அறிவித்ததோடு சரி .எதையும் முறையாக செய்யவில்லை என பொதுமக்கள் கேலி செய்ய துவங்கி விட்டனர்.

விருதுநகர் நகராட்சி சார்பில் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் வெறும் பேச்சில் மட்டுமே உள்ளது. செயல்பாட்டில் இல்லை. நகராட்சியின் சுகாதார மற்றும் பொறியியல் துறை பணிகள் மிகவும் மந்தமான நிலையில் உள்ளது. புதிதாக வளர்ச்சி திட்டங்கள் எதுவுமே இல்லை. வி.என்.பி.ஆர்., பூங்காவை குடியரசு தினத்தன்று சுத்தம் செய்தனர். முறையாக சுத்தம் செய்யாமல் கலெக்டர் வருகைக்காக மேம்போக்காக சுத்தம் செய்தனர். தற்போது அந்த பூங்கா புதர் காடாக காட்சி அளிக்கிறது. செயற்கை நீருற்றும் செயல்படாது வெறும் காட்சி பொருளாக உள்ளது.

உரக்கிடங்கை யொட்டி காணப்படும் புறம்போக்கு நிலத்தில் அடர்வனம் திட்டத்தை கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. மியாவாக்கி காடுகள் முறை என கூறி அப்படி செய்ய போகிறோம்... இப்படி செய்ய போகிறோம் என பேச்சில் மட்டுமே திட்டத்தை செயல்படுத்தி காட்டினார்களே தவிர செயல்பாட்டில் இல்லை . பாதாளசாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வெளியேறும் நீரை கொண்டு ஏரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதுவும் இதற்கான அறிகுறியின்றி உள்ளது.

இப்படிதான் பல திட்டங்களை அறிவித்து காற்றோடு காற்றில் பறக்க விடுகின்றனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பாதாளசாக்கடை திட்டத்தில் இன்னும் பல வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கவில்லை. தோல்வியடைந்த பாதாளசாக்கடை திட்டத்தால் ரோடுகள் துவம்சம் ஆனதுதான் மிச்சம்.

நகராட்சி குடிநீர் திட்டங்களில் முக்கியமானதாக கருதப்படும் 10 லட்சம் லிட்டர் கொண்ட 2 மேல்நிலை தொட்டிகள் இன்று வரை செயல்படாமலே உள்ளன. துாய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட உரக்கிடங்கு நீண்ட நாட்களாக பயன்பாடற்று கிடக்கிறது. இதற்காக வாங்கப்பட்ட கருவிகள் சுத்திகரிப்பு நிலையத்தில் துருபிடித்து காட்சி அளிக்கின்றன. குப்பை வாங்கும் திட்டத்திலும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி உள்ளது. பல இடங்களில் முறையாக குப்பை வாங்குவதில்லை .இப்படி நகராட்சி குறைகளை அடுக்கி கொண்டே போகலாம்...........

இறங்குமுகத்தில் துாய்மை திட்டம்

விருதுநகர் நகராட்சியில் துாய்மை இந்தியா திட்டம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது எனக் கூறலாம். பல்வேறு நகராட்சிகளில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் விருதுநகர் நகராட்சி நிர்வாகத்தில் சுகாதார பணிகள் மிகவும் மோசமாக உள்ளன. டெங்கு ஒழிப்பு பணியும் பெயரளவில் தான் நடந்துள்ளது. பாதாளசாக்கடை மேன்ஹோல் வழியாக ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சுற்றுப்புறத்தில் துர்நாற்றம் வீசுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் இந்த நகராட்சி தான் துாய்மை இந்தியா திட்டத்தில் மிகவும் பின் தங்கி காணப்படுகிறது.

எல்லாம் 'விரைவில்'

அடர்வனம் திட்டத்தை செயல்படுத்த நிதி தேவைப்படுகிறது. ராம்கோ நிறுவனம் உதவ முன்வந்துள்ளது .விரைவில் பணி துவங்கும். ஏரியை வெட்டுவதற்கு மண்ணின் நிலை சரியாக இல்லை. மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை வாங்கும் திட்டம் என்னை பொறுத்த வரையில் வெற்றி பெற்றுள்ளது.

வீட்டிற்கு அருகில் வந்து குப்பை வாங்குவதில்லை என சில பகுதியினர் புகார் கூறுகின்றனர். தெருக்களில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்தால் எப்படி வாகனங்கள் உள்ளே நுழையும். உரக்கிடங்கு கருவிகள் சீரமைக்கப்பட்டு அடுத்த வாரம் முதல் இயங்கும். 12 ஆயிரம் வீடுகளில் 7,600 வீடுகளுக்கு பாதாளசாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்படும்.

பார்த்தசாரதி, நகராட்சி கமிஷனர், விருதுநகர்.

பின்தங்கிய கமிஷனர்
கமிஷனர் பணிக்கு வந்த 3 மாதங்கள் நன்றாக தான் பணியாற்றினார். 3 மாதங்கள் கழித்து அவரது செயல்பாடு மிகவும் பின்தங்கி விட்டது. மக்களின் சைக்காலஜியை நன்றாக புரிந்து அனைவரிடமும் நல்ல பெயர் வாங்கி விட்டார். உரக்கிடங்கில் அனைத்து இயந்திரங்களும் துருப்பிடித்துவிட்டன. 2007ல் துவங்கப்பட்ட பாதாளசாக்கடை இன்று வரை முடியவில்லை. 80 சதவீதம் முடிந்திருப்பதாக கூறுகிறார்கள்.அத்திட்டம் 30 சதவீதம் கூட முடியவில்லை.

ரத்னவேல், டாக்டர், விருதுநகர்.

எல்லை பகுதிகளில் அள்ளினால் என்ன

குப்பை வாங்க வருகிறார்கள். ஆனால் குப்பை வெளிப்பகுதியில் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு போதவில்லையா, நகராட்சியில் சுகாதார பணிகள் தொய்வா என தெரியவில்லை. எல்லை பகுதிகளில் கிடக்கும் குப்பையை நகராட்சி நிர்வாகம் அள்ளினால் என்ன. விருதுநகரை சிவகாசி ஆத்துப்பாலம் அருகில் உள்ள குப்பை துர்நாற்றத்தோடு வரவேற்கிறது.

சோமசுந்தரம், தனியார் ஊழியர், விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X