வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: அமெரிக்க அதிபர் டிரம்ப் , வரும் 24ல் குஜராத் வர உள்ள நிலையில், அவர்களை கவரும் வகையில் சாலைகள் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன. பனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அந்தபகுதியில் உள்ள குடிசை பகுதிகளை மறைத்து 7 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலினா வரும் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். இரண்டு நாட்களும் குஜராத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க இந்திய அரசும், குஜராத் மாநில அரசும் தயாராகி வருகிறது.

இந்நிலையில் குஜராத்தில் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசைவாரிய குடியிருப்பு பகுதிகளை மறைக்கும் வகையில் 7 அடி உயரத்திற்கு அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு சுவர் ஒன்றை மாநகராட்சி கட்டி வருகிறது. ஆமதாபாத்தில் இருந்து காந்திநகர் நோக்கி செல்லும் திசையில் கட்டப்படுகிறது.
இது தொடர்பாக ஆமதாபாத் மாநகராட்சி கமிஷனர் கூறுகையில், சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகளை தடுக்கவே சுவர் கட்டும் முடிவு இரண்டு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. இதற்கும், டிரம்ப் வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த பகுதியை நான் ஆய்வு செய்த பிறகு, அப்பகுதி வாசிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இதன்பிறகு தான், ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், மரங்களை காக்கவும் சுவர் எழுப்பும் முடிவு செய்யப்பட்டது என்றார்.
டிரம்ப் வருகையின் போது சாலைகளில் கால்நடைகள், நாய்கள் இருக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ள மாநகராட்சி, ஆமதாபாத் விமான நிலையம் முதல், டிரம்ப் நிகழ்ச்சி நடக்கும் இடம் வரை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.விமான நிலையம் முதல், டிரம்ப் கான்வாய் கடந்து செல்லும் இந்திரா மேம்பாலம் வரையில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்தியுள்ள அதிகாரிகள், அந்த பகுதிகளில் பனைமரங்களை நட்டுள்ளனர். ஆமதாபாத்தின் வடமேற்குபகுதியில் உள்ள மோதிராவில் அனைத்து சாலைகளும், மறுசீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் முதல் சபர்மதி ஆசிரமம் வரையில் பல சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், மின்சார கம்பங்களுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது.மோதிரா நகரில் உள்ள மைதானத்தை சுற்றிய பகுதிகளில் அடிக்கடி சுத்தப்படுத்துவதுடன், அங்கு கொசுக்கள் இல்லாதவாறு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. டிரம்ப், அவரது மனைவி மெலினா, பிரதமர் மோடி செல்லும் பாதைகளில் பல மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.