இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: கடந்த 1989க்கு பிறகு 2019 பிப்., 14 மாலை 3.15 மணிக்கு காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது, சொகுசு காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இந்தியாவையும், பாதுகாப்பு படையினரையும் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் மூலம், பயங்கரவாதிகளையும், பயங்கரவாத குழுக்களையும் உற்பத்தி செய்யும் நாட்டிற்கு பதிலடி கொடுக்க, பழைய முறைகளை கையாள இனியும் தயாராக இல்லை என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா தெளிவாக எடுத்து கூறியது.
பின்னணியில் காஷ்மீர் இளைஞர்
புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு காரணமாக இருந்தது. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அடில் அகமது தர் குறித்த வீடியோ காட்சிகளை வெளியிட்ட அந்த அமைப்பு, தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது. பயங்கரவாதி அகமது தர், 2018 மார்ச்சில் வீட்டை விட்டு வெளியேறும் போதுதான் அவனது குடும்பத்தினர் கடைசியாக பார்த்தனர். ஆரம்ப கட்ட விசாரணையில் காஷ்மீர் போலீசாரிடம் வாங்கிய அடி காரணமாக பயங்கரவாத அமைப்பில் இணைந்தது தெரியவந்தது. மேலும் 2016 செப்., முதல் 2018 மார்ச் வரை 6 முறை போலீசாரிடம் பிடிபட்டு பின்னர், குற்றச்சாட்டுகளின்றி விடுதலையானதும் தெரியவந்தது.
ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவில் உள்ள முகாமிற்கு 2,547 சிஆர்பிஎப் வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தான் பயங்கரவாதி, காரை மோத செய்து வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்ததுடன், பஸ் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த தாக்குதல் சம்பவமானது, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீதான இந்திய நிலைப்பாடு மற்றும் பாதுகாப்பு படையினர், இந்திய தலைவர்களின் கருத்தை மாற்றியது.

புல்வாமாவிற்கு பின்
இந்த தாக்குதல் நடந்து 4 நாட்களுக்கு பின் பிப்.,18 அன்று, உளவுத்துறை தகவல் அடிப்படையில் சிஆர்பிஎப், ராஷ்ட்ரிய ரைபிள் மற்றும் எஸ்பிஜி படையினர் இணைந்து நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் உள்ளிட்ட 4 பேரை சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ரஷீத் காசி என்பவன் சுட்டு கொல்லப்பட்டான். உள்ளூரை சேர்ந்த ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் எடுக்கும் ஹிலால் அகமது மற்றும் இரண்டு ஆதரவாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
உளவுத்துறை தகவலை தொடர்ந்து, பாகிஸ்தானின் சைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாலகோட்டில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த மோடி தலைமையிலான பா.ஜ., அரசு முடிவு செய்தது. பிப்.,26 அதிகாலை 3.30 மணியளவில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் -2000 வகையை சேர்ந்த 12 போர் விமானங்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையை தாண்டி,இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட, 1000 கிலோ , ஸ்பைஸ்2000 ரக வெடிகுண்டுகளை பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வீசி தாக்கியது. சக்கோட்டி, முசாபார்பாத்தில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதும் வீசப்பட்டது. 1971 இந்தியா பாகிஸ்தான் இடையிலான போருக்கு பின்னர், அப்போதுதான் இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டி சென்றன.கடந்த 2016 செப்டம்பர் 18ல் உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இதற்குபின், நடந்த மோசமான தாக்குதலாக புல்வாமா அமைந்துவிட்டது.

இந்திய விமானப்படை தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் , பதிலடி கொடுக்க நினைத்து தாக்குதல் நடத்த காஷ்மீருக்குள் நுழைய முயன்ற போது, இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்21 பைசன் ரக போர் விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது, மிக் விமானம் நொறுங்கி விழுந்தது. அதில் இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தரையிறங்கினார். ஆனால், அதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர்கள் வந்த எப் -16ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தரையிறங்கிய அபிநந்தனை பாகிஸ்தான் வீரர்கள் பிடித்து சென்றனர். இதன் பின்னர் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக மார்ச் 1ல் அபிநந்தனை, நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
பிரதமர் மரியாதை
பிரதமர் மோடி வெளியிட்ட டுவீட்:
புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த , துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். நமது நாட்டை பாதுகாக்கவும், பணியாற்றவும் உயிர்தியாகம் செய்தவர்கள். அவர்களின் உயிர்தியாகத்தை இந்தியா எப்போதும் மறக்காது எனக்கூறியுள்ளார்.
Tributes to the brave martyrs who lost their lives in the gruesome Pulwama attack last year. They were exceptional individuals who devoted their lives to serving and protecting our nation. India will never forget their martyrdom.
— Narendra Modi (@narendramodi) February 14, 2020
உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், புல்வாமா தியாகிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மிகுந்த தியாகம் செய்த எங்கள் துணிச்சலான இதயங்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடையதாக இருக்கும்.என தெரிவித்துள்ளார்.
I pay homage to the martyrs of Pulwama attack.
India will forever be grateful of our bravehearts and their families who made supreme sacrifice for the sovereignty and integrity of our motherland.
— Amit Shah (@AmitShah) February 14, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE