தமிழ்நாடு

பாதாள சாக்கடை திட்டப்பணி படுமந்தம்: கடைவீதியில் காத்து வாங்கும் கடைகள்

Added : பிப் 14, 2020
Advertisement

சேலம்: கடைவீதியில், பாதாள சாக்கடை திட்ட பணி படுமந்தமாக நடப்பதால், அங்குள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம், பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்துக்கு, 149.39 கோடி ரூபாய் ஒதுக்கி, 2006ல் அரசாணை வெளியிடப்பட்டது. மூன்று, பகுதிகளாக நிறைவேற்ற, தீர்மானிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு, ஒப்பந்ததாரர்கள் முன்வரவில்லை. 2011ல், மீண்டும் இத்திட்ட பட்ஜெட் திருத்தியமைத்து, 216 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன்பின், பணி மேற்கொண்டு, பாதியில் ஓடிய ஒப்பந்ததாரர், மேம்பால பணி உள்ளிட்டவற்றால், இத்திட்ட பணி முடியாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இரண்டாவது பகுதியில், சேலம், முதல் அக்ரஹாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை அமைக்க, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 3.50 கோடி ரூபாய் மதிப்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. நகர மைய பகுதி, ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ள இப்பகுதிகளில், எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் நிலையில், இச்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பாதாள சாக்கடை திட்ட பணி, கடந்தாண்டு ஆகஸ்டில் தொடங்கப்பட்டது. ஆனால், இதுவரை முடியாததால், அப்பகுதி முழுவதும், மண் புழுதி நிரம்பி, மக்கள் கடைகளுக்கு போக, வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: கே.ராஜமாணிக்கம், சின்னக்கடை வீதி: ஏழு மாதமாக, இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சாலைகள் சீரழிந்துள்ளன. பணியும் ஆமை வேகத்தில் நடப்பதால், மக்கள் இங்கு வரவே சிரமத்துக்குள்ளாகின்றனர்.

அரசியல்வாதிக்கு மட்டும்...:

என்.குசலகுமார், முதல் அக்ரஹாரம்: வளர்ச்சி பணியை வரவேற்கிறோம். ஆனால், மக்கள் அவதிப்படும் இடங்களில், இரவு, பகலாக பணிபுரிந்து, விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் வசிக்கும் பகுதியில், சில நாளில் பணியை முடிக்கும்போது, இங்கு மட்டும் ஏன் பல மாதமாகிறது?

எஸ்.முருகன், சின்னக்கடை வீதி: இருசக்கர வாகனங்களில் கூட, இச்சாலைகளில் வர முடிவதில்லை. குண்டும், குழியுமான இடங்களில், தினமும் பலர் விபத்துக்குள்ளாகின்றனர். இதனால், வணிக நிறுவனங்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. என்.சுல்தான் அகமது, கடைவீதி: போக்குவரத்து இல்லாதது, புழுதி நிரம்பியதால், வியாபாரம் 'படுத்து'விட்டது. குறிப்பாக, சிறு வியாபாரிகள் நிலை மோசம். நாளடைவில், இப்பகுதிக்கு வருவதையே மக்கள் மறந்துவிடும் சூழலை, மாநகராட்சி ஏற்படுத்திவிடும்போல் தெரிகிறது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கடைவீதி பகுதிகளில் பணி தொடங்கி, விரைவாகத்தான் நடந்தது. தீபாவளி, பொங்கல் பண்டிகையில், வியாபாரிகள் கோரிக்கையால் பணிகள் நிறுத்தப்பட்டன. மற்றபடி, திட்டத்தை முடிக்க வேண்டிய காலகட்டத்தில் சரியானபடியே பணி நடக்கிறது. ஓரிரு மாதங்களில் பணி முடிந்து, சாலை அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X