இறுதிக்கட்ட நெல் அறுவடை பணி தீவிரம்: இழப்பு ஏற்படுவதால் விவசாயிகள் தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறுதிக்கட்ட நெல் அறுவடை பணி தீவிரம்: இழப்பு ஏற்படுவதால் விவசாயிகள் தவிப்பு

Added : பிப் 14, 2020
Share

கரூர்: கரூர் மாவட்டத்தில், காவிரி, அமராவதி பாசனம் வாயிலாக, 27 ஆயிரத்து, 562 ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி நடந்தது. மேட்டூர் அணையில் இருந்து, போதுமான அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், நெல் சாகுபடி இலக்கை காட்டிலும் அதிகளவில் நடந்துள்ளது. ஆனால், குலை நோய் பாதிப்பு காரணமாக, மகசூல் குறைந்து உள்ளது. பெரும்பாலான இடங்களில், அறுவடை பணிகள் முடிவடைந்து விட்டன. சில பகுதிகளில் மட்டும், இறுதிக்கட்டமாக அறுவடை பணி நடக்கிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: இந்தாண்டு போதுமான தண்ணீர் கிடைத்தும், பருவ நிலை காரணமாக, குலை நோய் தாக்குதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு, 35 முதல், 40 மூட்டைகள் மகசூல் கிடைக்கும். ஆனால், 30 முதல், 50 சதவீதம் பாதிப்பு இருந்த பகுதிகளில், 20 முதல், 30 மூட்டை வரையும், 50 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு உள்ள நிலங்களில், 5 முதல், 10 மூட்டை கிடைப்பது அரிதாக உள்ளது. நோய் பாதிப்பு காரணமாக உரிய விலை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு பி.பி.டி.,5204 என்ற ஆந்திர பொன்னி, 1,350 ரூபாய்க்கு விலை போனது. தற்போது தரத்தை பொறுத்து, 900 முதல், 1,100 ரூபாய் வரை வியாபாரிகள் வாங்குகின்றனர். விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், அறுவடைக்காக இயந்திரங்களை விவசாயிகள் நம்பியுள்ளனர். இயந்திரம் மூலம், நெல் அறுவடை செய்யப்படுவதால், வைக்கோலுக்கு விலை குறைந்துவிட்டது. கையால் நெல்லை அறுவடை செய்யும் போது, நீளமான வைக்கோல் கிடைக்கும். ஆனால், இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் வைக்கோல் விலை கிடைக்காது. ஏற்கனவே, மகசூல் குறைவு, நெல் அறுவடை இயந்திரம் வாடகை அதிகரிப்பு, சாகுபடி செலவு அதிகரிப்பு, நெல் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால், விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X